கோவை : நிலம் தொடர்பான வழக்கை வாபஸ் பெறாவிட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்ததாகக் கூறி, 73 வயது முதியவர் மேற்கு மண்டல ஐஜி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
உடுமலை காந்தி நகர் கல்யாணி நகரைச் சேர்ந்தவர் விஜயசேகரன் (73). இவருக்கு கோவை மசக்காளிபாளையம் காந்தி நகர் பகுதியில் சொந்தமாக 20 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தை கடந்த 1991-ம் ஆண்டு வாங்கியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த ஜூலை 9-ம் தேதி சுலோச்சனா என்பவர் மற்றும் அவரது கூட்டாளிகள் விஜயசேகரனின் நிலத்தில் இருந்த கம்பி வேலியை உடைத்து, அத்துமீறி கூடாரம் அமைத்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக விஜயசேகரன் கோவை சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் சுலோச்சனா உள்ளிட்ட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், போலீசாரின் விசாரணையில், போலி ஆவணங்களை தயாரித்து சிலர் அந்த நிலத்திற்கு விற்பனை ஒப்பந்தம் பதிவு செய்திருப்பதும் தெரியவந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 16-ம் தேதி உடுமலையில் உள்ள விஜயசேகரனின் வீட்டிற்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வந்துள்ளார். அவர் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கின் எஃப்ஐஆர் நகலை கையில் வைத்திருந்ததாகவும், திருப்பூரைச் சேர்ந்த ஒப்பந்ததாரர்கள் தன்னை அனுப்பியதாக கூறியதாகவும் விஜயசேகரன் தெரிவித்துள்ளார்.
பின்னர் அந்த நபர் ஒரு செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு, விஜயசேகரனிடம் போனை கொடுத்துள்ளார். மறுமுனையில் பேசிய நபர் விஜயசேகரனை மிரட்டியதாக கூறப்படுகிறது.
மேலும், நேரில் வந்த நபரும், போலீசில் தொடரப்பட்டுள்ள வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்றும், இல்லையெனில் கொலை செய்து விடுவோம் என்றும் மிரட்டியதாக விஜயசேகரன் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
Also Read: பாஜகவை தோற்கடிக்கும் பொறுப்பு எங்களுக்கு உள்ளது- கோவையில் ஃபைஜி தெரிவிப்பு…
இதையடுத்து, விஜயசேகரன் மேற்கு மண்டல ஐஜி அலுவலகம் மற்றும் உடுமலை போலீசில் சிசிடிவி காட்சிகளுடன் புகார் அளித்துள்ளார்.
தனக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தனது நிலம் தொடர்பான விவகாரத்தில் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் புகாரில் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.





