கோவை: கோவை ரத்தினபுரி பால்சாமி நகரில் வீட்டை உடைத்து நகை மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரத்தினபுரி பால்சாமி நகரைச் சேர்ந்த ஹரிராவ் (60), தனியார் மருத்துவமனை ஊழியர். இவரது மனைவி ஜெயந்திபாய் (58). இவர்கள் நேற்று வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றிருந்தனர்.
அந்த நேரத்தை பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள், வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். யாரும் இல்லாததை முன்கூட்டியே கண்காணித்திருந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
வீட்டிற்குள் சென்ற அவர்கள், பீரோவை திறந்து அதில் இருந்த 7.5 பவுன் தங்க நகைகள் மற்றும் சுமார் ரூ.1 லட்சம் மதிப்பிலான வெள்ளி பொருட்களை திருடிச் சென்றுள்ளனர். மொத்தமாக சுமார் ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளை போனதாக கூறப்படுகிறது.
பின்னர் வீடு திரும்பிய ஹரிராவ், கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ சீர்குலைந்த நிலையில் இருந்ததையும், நகை மற்றும் பொருட்கள் காணாமல் போனதையும் கண்டறிந்தார்.
இதையடுத்து அவர் ரத்தினபுரி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அருகிலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


