கோவை: கோவை மாவட்டம் கோவைப்புதூர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் மூவர் பயணம் செய்தபோது, டிப்பர் லாரி மோதிய விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னைக்கு அடுத்த பெரிய நகரான கோவையில் மக்கள் தொகையைப் போலவே நாளுக்கு நாள் வாகனப் போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காற்று வாங்கிய சாலைகளில், தற்போது வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, இளைஞர்கள் சிலர் சாலை விதிகளை மதிக்காமல் வாகனங்களை ஓட்டி அவ்வப்போது விபத்துகளில் சிக்கி வருகின்றனர். அந்த வகையில், கோவையில் இன்று ஒரு கோர விபத்து அரங்கேறியுள்ளது.
கோவைப்புதூரில் உள்ள தனியார் கல்லூரி, அறிவொளி நகர் சாலையில் ஒரே மோட்டார் சைக்கிளில் 3 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.
அப்போது, அந்த இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து அவ்வழியாகச் சென்ற டிப்பர் லாரி மீது எதிர்பாராத விதமாக மோதியுள்ளது. இதில், இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த ஒருவர் லாரி டயரில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மேலும், பைக்கில் பயணம் செய்த இருவர் கவலைக்கிடமான நிலையில் சாலையில் விழுந்து கிடந்தனர். அவர்களை மீட்ட பொதுமக்கள், உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Also Read: கங்கனா VS க்ரீத்தி சனோன் மோதல்… கவர்ச்சி ஆடை to பாரத மாதா கி ஜெய் வரை…
தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற குனியமுத்தூர் காவல்துறையினர், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவைப்புதூரில் டிப்பர் லாரி மோதிய கோர விபத்தில் ஒருவர் லாரி டயரில் சிக்கி உடல் நசுங்கி உயிரிழந்தார். இருவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.





