கோவையில் போலீசார் பற்றாக்குறை..! பணிச்சுமையால் தவிக்கும் காவல்துறை..!

கோவை: கோவையில் போலீசார் பற்றாக்குறையால் காவல் நிலையங்களில் பணிச்சுமை அதிகரித்து, பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் சேவையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Advertisement

சமீபத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு மற்றும் ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படை போன்ற புதிய பிரிவுகள் தொடங்கப்பட்டாலும், அதற்கான புதிய போலீசார் நியமிக்கப்படவில்லை.

ஏற்கனவே உள்ள காவல் நிலையங்களில் பணிபுரியும் போலீசாரையே பிரித்து இந்த பிரிவுகளில் பணியமர்த்தியுள்ளதால், காவல் நிலையங்களில் பணியாளர் பற்றாக்குறை மேலும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

கோவை மாநகரில் 24 காவல் நிலையங்களும், புறநகர் பகுதிகளில் 39 காவல் நிலையங்களும் இயங்கி வருகின்றன. மொத்தம் 63 காவல் நிலையங்கள் இருந்தாலும், மக்கள் தொகைக்கு ஏற்ப போலீசார் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது.

Advertisement

ஐநா சபை பரிந்துரையின்படி ஒரு லட்சம் மக்களுக்கு 222 போலீசார் இருக்க வேண்டும். ஆனால் தற்போது அந்த அளவிற்கு போலீசார் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.

கோவை மாநகரத்திற்கு ஒதுக்கப்பட்ட 1,719 போலீசாரில் தற்போது 1,512 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். அதேபோல் கோவை புறநகர் காவல் நிலையங்களில் சுமார் 400 முதல் 500 போலீசார் வரை பற்றாக்குறை நிலவி வருவதாக கூறப்படுகிறது.

Advertisement

குறிப்பாக சூலூர், பெரியநாயக்கன்பாளையம், ஆனைமலை மற்றும் பொள்ளாச்சி போன்ற பகுதிகளில் அதிக குற்றச்சம்பவங்கள் நடைபெறுவதால், அங்குள்ள காவல் நிலையங்களில் கூடுதல் போலீசார் தேவைப்படுகின்றனர்.

ஆனால் தேவைக்கு குறைவாகவே போலீசார் பணியாற்றி வருவதால், பணிச்சுமை அதிகரித்துள்ளதாக போலீசார் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், “வார விடுமுறை, பண்டிகை விடுப்பு என்பதே தற்போது கிடைப்பதில்லை. தொடர்ச்சியான டபுள் ஷிப்ட் பணியால் குடும்பத்துடன் நேரம் செலவிட முடியாமல் மனஅழுத்தத்திற்கு ஆளாகி வருகிறோம்.

தொழில்நுட்ப வசதிகள் குறைவாக இருப்பதால் வழக்குகளை கையாளவும் சிரமமாக உள்ளது” என்றனர்.

மேலும், “புதிய பிரிவுகளுக்கு காவல் நிலையங்களில் இருந்து போலீசார் மாற்றப்பட்டதால், ஏற்கனவே பற்றாக்குறை இருந்த நிலையங்களில் நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது. போலீஸ் பற்றாக்குறையை உடனடியாக சரி செய்ய வேண்டும்” என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து முன்னாள் போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், “தமிழகம் முழுவதும் உள்ள தற்போதைய போலீஸ் பலம் இன்றைய மக்கள் தொகைக்கு போதுமானதல்ல.

மாநிலம் முழுவதும் போலீஸ் பலத்தை 25 முதல் 35 சதவீதம் வரை உயர்த்த வேண்டும். நவீன குற்றங்களை சமாளிக்க தொழில்நுட்ப பயிற்சி பெற்ற இளைஞர்கள் காவல்துறைக்கு தேவை” என்றார்.

வளர்ந்து வரும் கோவைக்கு புதிய திட்டங்கள் மட்டுமின்றி, அதனை செயல்படுத்த போதிய மனிதவளமும் அவசியம் என்பதால், உடனடி போலீஸ் பணியாளர் நியமனம் தேவை என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

Flipkart Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

சிறுவனுக்கு பாலியல் தொல்லை; வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட 25 வயது வாலிபர் மீது, மாநகர காவல்துறை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்துள்ளது.

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...