கோவை: கோவையில் நேற்று மாயமான 10 வயது சிறுமி இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், சூலூர் அருகே 10 வயது சிறுமி ஒருவர் நேற்று மாயமானார். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில், சிறுமி கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டு குளக்கரையில் வீசப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் பெரும் கொந்தளிப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த காட்டுமிராண்டித்தனமான சம்பவம் குறித்து தகவல் அறிந்த சூலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் அதே பகுதியை சேர்ந்த இரு நபர்கள் மீது சந்தேகம் வலுத்துள்ளதால், அவர்களை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
விளையாடிய சிறுமி
காவல்துறையின் ஆரம்பக்கட்ட விசாரணையில் கிடைத்த தகவல்களின்படி, சூலூரை சேர்ந்த 10 வயது சிறுமி நேற்று மாலை தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென மாயமாகியுள்ளார். இரவாகியும் சிறுமி வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், அக்கம் பக்கத்திலும் பல்வேறு இடங்களிலும் தேடி பார்த்துள்ளனர்.
சிறுமி குறித்து எவ்வித தகவலும் கிடைக்காததால் பெரும் தவிப்புடன் தேடி வந்துள்ளனர். இந்நிலையில் இன்று காலை அதே பகுதியில் உள்ள குளக்கரை ஓரத்தில் சிறுமி மர்மமான முறையில் சடலமாக கிடப்பதை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக இதுகுறித்து சூலூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அந்த பகுதியை சேர்ந்த இரண்டு நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அவர்கள் இந்த கொடூர சம்பவத்தின் பின்னணியில் இருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.
கோவையில் மனிதநேயத்தையே உலுக்கியுள்ள இந்த சிறுமியின் படுகொலை சம்பவத்தால், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.




சூலூர் போலீஸ் வெஸ்ட் வெஸ்ட்
சூலூர் போலீஸ் வெஸ்ட்