கோவை: கோவையில் அனுமதியின்றி மரத்தை வெட்டிய நபர்களுக்கு 2.10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது பாராட்டுதலை பெற்று வருகிறது.
கோவை மாநகர் வெரைட்டி ஹால் பகுதியை சேர்ந்த சங்கர்லால் என்பவர் அவரது சொந்த இடத்திற்கு முன்பு உள்ள பொது இடத்தில் இருந்த புங்கை மரத்தை அரசு அனுமதியின்றி கடந்த 10ம் தேதி வெட்டி உள்ளார்.
இது குறித்து Green Care அமைப்பினர் மற்றும் அப்பகுதி மக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் அவருக்கு 1 லட்சத்து 6 ஆயிரத்து 400 ரூபாய் அபராதமும் 10 மரக்கன்றுகளை அவரது இடத்தில் வளர்க்கவும் கோவை தெற்கு வருவாய் கோட்டாட்சியர் மாருதிபிரியா உத்தரவிட்டுள்ளார்.
அதே போன்று குனியமுத்தூர் பகுதியில் 5 மரங்களின் மரக்கிளைகளை வெட்டுவதற்கு அனுமதி வாங்கிவிட்டு மரத்தில் பாதியை வெட்டிய தனியார் கடையாளருக்கு 1 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து பேரூர் வட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
அனுமதியின்றி மரத்தை வெட்டினால் சிறிய அபராதம் விதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இதுபோன்று பெரிய தொகை அபராதமாக விதிக்கப்பட்டதற்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. சிறிய அபராதம் என்றால் பலரும் அபராத தொகையை செலுத்தி விட்டு இதுபோன்று தொடர்ந்து மரங்களை வெட்டுவார்கள் என்றும் ஆனால் பெரிய தொகையை அபராதமாக விதிக்கும் பொழுது தான் இது போன்ற செயல்கள் குறையும் என்று பொதுமக்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.




