கோவை: : கடைசி நேரத்தில் முன்பதிவு செய்யப்பட்ட பேருந்து பயணத்தை ரத்து செய்து, மாற்று ஏற்பாடுகள் செய்யாததுடன், கட்டணத்தையும் திருப்பித் தராத தனியார் ஆம்னி பேருந்து நிறுவனம், பாதிக்கப்பட்ட பயணிக்கு ரூ.25 ஆயிரத்துக்கும் மேல் இழப்பீடு வழங்க வேண்டும் என கோவை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கோவையைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர், தனது குடும்பத்தினருடன் சொந்த ஊரான தூத்துக்குடிக்கு சென்று வருவதற்காக பிரபல தனியார் ஆம்னி பேருந்தில் நான்கு பேருக்கான இருவழி பயண டிக்கெட்டை முன்பதிவு செய்திருந்தார்.
பயணத்திற்காக குடும்பத்துடன் தயாராக இருந்தபோது, “பேருந்து பழுதாகிவிட்டது” என்று தெரிவித்து, கடைசி நேரத்தில் நிறுவனம் பயணத்தை ரத்து செய்ததாக கூறப்படுகிறது. மேலும், மாற்று பேருந்து ஏற்பாடு செய்யாததுடன், திரும்பி வருவதற்காக முன்பதிவு செய்திருந்த டிக்கெட்டையும் ரத்து செய்து, அதற்கான கட்டணத்தையும் திருப்பி வழங்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.
இதனால், பாலமுருகன் குடும்பத்தினர் அவசரமாக கூடுதல் செலவு செய்து வேறு பேருந்தில் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதுடன், மன உளைச்சலுக்கும் ஆளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேருந்து நிர்வாகத்திடம் முறையிட்டும் உரிய தீர்வு கிடைக்காததால், பாலமுருகன் தனது வழக்கறிஞர் சம்பத் முத்துக்குமார் மூலம் கோவை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தலைவர் தங்கவேலு மற்றும் உறுப்பினர் மாரிமுத்து ஆகியோர், பேருந்து நிறுவனத்தின் செயல்பாடு சேவை குறைபாடு எனக் குறிப்பிட்டு, பயணக் கட்டணமாக செலுத்திய ரூ.5,803-ஐ திருப்பி வழங்கவும், மன உளைச்சலுக்காக ரூ.20,000 இழப்பீடு மற்றும் வழக்குச் செலவுடன் சேர்த்து மொத்தம் ரூ.25 ஆயிரத்துக்கும் மேல் வழங்கவும் உத்தரவிட்டனர்.





