தனியாக தங்கும் கல்லூரி மாணவர்கள் உஷார் ! கோவை போலீஸ் முக்கிய எச்சரிக்கை

கோவை: தனியாக வாடகை அறைகளில் தங்கும் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கொள்ளை, மிரட்டல், கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்டு வரும் கஞ்சா தொடர்புடைய கும்பலை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

கோவையில் தனியாக வாடகை அறைகளில் தங்கியுள்ள கல்லூரி மாணவர்களை குறிவைத்து கொள்ளை, மிரட்டல் மற்றும் கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்டு வரும் கஞ்சா தொடர்புடைய கும்பலை பிடிக்க மாநகர போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். மாணவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என போலீஸ் கமிஷனர் கண்ணன் அறிவுறுத்தியுள்ளார்.

Advertisement

விருதுநகரைச் சேர்ந்த கேசவன் (19), கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வருகிறார். குனியமுத்தூரில் வாடகை அறையில் தங்கி வந்த அவர், கடந்த 14-ம் தேதி நண்பரின் அழைப்பின் பேரில் அவரது அறைக்கு சென்றுள்ளார்.

அப்போது அங்கு இருந்த நண்பரும் மற்றொரு வாலிபரும் இணைந்து கேசவனை தாக்கி, அவர் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் செயினை பறித்தனர். பின்னர் அவரை ஒரு நாள் முழுவதும் அறையில் அடைத்து வைத்து, அவரது குடும்பத்தினரிடம் ரூ.2 லட்சம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் குனியமுத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவரை மீட்டனர். போலீசாரைக் கண்ட மர்மநபர்கள் பெப்பர் ஸ்பிரே தெளித்துவிட்டு தப்பிச் செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் துரத்தியபோது, வழியாக வந்த இருசக்கர வாகன ஓட்டியை கத்திமுனையில் மிரட்டி பைக்கை பறித்துக் கொண்டு தப்பினர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்த போலீசார், இந்த சம்பவத்தில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஆகாஷ் (24), முத்துப்பாண்டி (23) ஆகியோர் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இருவரையும் தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement

இதேபோல், கடந்த ஜூன் 5-ம் தேதி குனியமுத்தூரில் வாடகை அறையில் தங்கியிருந்த பி.டெக் மாணவர் ஒருவரை தாக்கி, அவரது தங்கச் செயின், செல்போன் மற்றும் ரூ.47 ஆயிரம் பணத்தை மர்ம கும்பல் பறித்துச் சென்ற சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியது.

குனியமுத்தூர் மற்றும் கோவைப்புதூர் பகுதிகளில் விடுதிகளை தவிர்த்து தனியாக வாடகை அறைகளில் தங்கியிருக்கும் கல்லூரி மாணவர்களை குறிவைத்து தொடர்ச்சியாக இத்தகைய குற்றச் சம்பவங்கள் நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் மற்றும் போதைப்பொருள் பழக்கத்தில் ஈடுபட்ட சிலரை பயன்படுத்தி, தனியாக வசிக்கும் மாணவர்கள் குறித்த தகவல்களை கும்பல் சேகரித்து வருவதாக தெரிவித்தனர்.

குறிப்பாக மது மற்றும் போதைப்பொருள் பழக்கம் உள்ள மாணவர்களை குறிவைத்து, பெற்றோருக்கும் போலீசாருக்கும் தெரியக்கூடாது என்ற அச்சத்தை பயன்படுத்தி மிரட்டி, பணம் மற்றும் நகைகளை பறிக்கும் சம்பவங்கள் நடைபெற்று வருவதாகவும் கூறினர்.

இதையடுத்து மாநகர போலீஸ் கமிஷனர் கண்ணன் உத்தரவின்பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து போலீஸ் கமிஷனர் கண்ணன் கூறுகையில், “மாணவர்கள் தங்கள் அறைகளில் வெளியாட்களையோ, படிப்பை பாதியில் நிறுத்திய முன்னாள் மாணவர்களையோ அல்லது கல்லூரி முடித்த சீனியர்களையோ தங்க வைக்கக் கூடாது. குற்றப் பின்னணி கொண்டவர்கள் மாணவர்களின் அறைகளில் தங்கியிருப்பது கண்டறியப்பட்டால், அந்த மாணவர்களும் சட்டரீதியான நடவடிக்கையை சந்திக்க நேரிடும்” என்றார்.

மேலும், தனியாக வாடகை வீடுகளில் தங்கியிருக்கும் அனைத்து மாணவர்களின் முகவரி, அவர்களுடன் தங்குபவர்கள் குறித்த விவரங்களை சேகரித்து காவல்துறையுடன் பகிர கல்லூரி நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கல்லூரிகள் திறக்கப்பட்ட ஒரு மாதத்திற்குள் அடுத்தடுத்து மாணவர்களை குறிவைத்து நடைபெற்றுள்ள இந்த சம்பவங்கள், கோவையில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

அதிமுகவை நடத்த எஸ்.பி.வேலுமணியே தகுதியானவர்- புகழேந்தி தெரிவிப்பு…

கோவை: அதிமுகவை நடத்த எஸ் பி வேலுமணி தகுதியானவர் என்று புகழேந்தி தெரிவித்துள்ளார். கோவையில் தனியார் ஹோட்டலில் புகழேந்தி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில் முதல்வர் தளபதி முன்னிலையில் தமிழக வெற்றி...

Video

ஜிடி மேம்பாலத்தில் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்ட இளம் பெண்கள்…

கோவை: கோவை அவிநாசி சாலை ஜி.டி மேம்பாலத்தில் கார் சன்ரூஃபில் ஆபத்தான முறையில் அமர்ந்து சென்ற 4 இளம்பெண்களின் வீடியோ வைரலாகி வருகிறது. கோவை - அவிநாசி சாலையில் உள்ள ஜி.டி மேம்பாலத்தில், நள்ளிரவுக்குச்...