கோவை: அதிமுகவுக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தாகவும், அதனை களைந்து விட்டு, தற்போது ஒற்றுமையாக இருக்க முடிவு செய்து விட்டதாகவும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
எம்.எல்.ஏ.,வாக பதவியேற்றபின் முதன்முறையாக சென்னையில் இருந்து கோவை வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு கோவை விமான நிலையத்தில் அக்கட்சித் தொண்டர்கள் ஆடிப்பாடி வரவேற்பு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:-
கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதி மக்கள் என்னை தொடர்ந்து 5வது முறையாக வெற்றி பெறச் செய்தமைக்கு, அவர்கள் பாதம் பணிந்து நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்று, இன்று தான் கோவை வருகிறேன். விமான நிலையத்தில் என்னை வரவேற்ற தொண்டர்கள் மற்றும் நண்பர்களுக்கு நன்றி.
எங்களைப் பொறுத்தவரை, அண்ணா திமுக எங்கள் உயிர் மூச்சு. ஆனால் பத்திரிகைகள் பல வகைகளில் எழுதுகின்றன. நாங்கள் பதவிக்காக செல்கிறோம் என்று கூறுகிறார்கள். தேர்தலுக்கு முன்புகூட இப்படி செய்யவில்லை. இப்போது ஒரு குழப்பத்தை உருவாக்குகிறார்கள்.
எங்களுக்கு பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான் என்று முன்னரே கூறியுள்ளோம். எங்களுக்கு சில கோரிக்கைகள் இருந்தன. எனக்கும் சி.வி. சண்முகத்திற்கும் இருந்த கோரிக்கைகளை அவரும் ஏற்றுள்ளார். அதனால் இணைந்து செயல்பட முடிவு எடுத்துள்ளோம்.
எங்கள் நோக்கம்
எடப்பாடி பழனிசாமி எங்களது கோரிக்கைகளை ஏற்றுள்ளார். இனி கட்சியை வலுப்படுத்துவோம். தோல்வி குறித்து ஆராய்ந்து, சரியான முறையில் கட்சியை மீண்டும் வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வோம். மீண்டும் அதிமுக ஆட்சி அமைவதே எங்கள் நோக்கம்.
ஒரு சில ஊடகங்கள், நாங்கள் பதவிக்காக சென்றோம் என்று கூறுகின்றன. அப்படியெல்லாம் இல்லை.
மக்கள் தவெகவுக்கு ஆதரவு அளித்தார்கள். அந்த அடிப்படையில்தான் நாங்கள் தவெகவுக்கு ஆதரவு கொடுத்தோம். திமுக எதிர்ப்பு என்ற நிலைப்பாட்டிலேயே நாங்கள் ஆதரவு அளிப்பதாக தவெகவினரும் தெரிவித்துள்ளனர்.
இப்போதும் எல்லோரும் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம். ஆனால் தவறாக எழுதுகிறார்கள். நாங்கள் அண்ணன்-தம்பி போல ஒற்றுமையாக இருக்கிறோம். தொண்டர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் நினைப்பதையே நாங்கள் செய்வோம்.
கருத்து வேறுபாடுகள் இருந்தன. அதனை களைந்து விட்டு, ஒற்றுமையாக இருக்க முடிவு செய்து விட்டோம். சி.வி. சண்முகத்துடன் ஒற்றுமையாக முடிவு எடுத்துள்ளோம். அதே ஒற்றுமை என்றும் தொடரும்.
சிவி சண்முகமும், நானும் ஒரே கருத்தில்தான் இருக்கிறோம். நேற்று இரவுக்கூட ஒன்றாகத்தான் இருந்தோம். இன்று காலையிலும் அவரிடம் சொல்லிவிட்டுத்தான் வந்தேன்.
திமுக ஆட்சியில் நடந்தது போலவே இப்போதும் நடந்து கொண்டிருக்கிறது. தவெகவினர் பல அறிக்கைகள் கொடுத்திருக்கிறார்கள். இதையெல்லாம் மக்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர். அதனை நாங்கள் வலியுறுத்துவோம்.
இப்போதுதான் தவெக ஆட்சிக்கு வந்திருக்கிறது. அவர்களுக்கும் ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும். இந்த குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும்.
கோவை மாவட்டம் மற்றும் தமிழ்நாட்டிற்கான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு புத்தகத்தை வழங்கியுள்ளோம். கோவை மாவட்டத்திற்கு மிகப்பெரிய வளர்ச்சியை நான் கொடுத்தேன். ஆனால் தற்போது அனைத்தும் தடைப்பட்டு நிற்கிறது.
இதனை அரசு செய்ய வேண்டும். செய்யவில்லை என்றால் சட்டமன்றத்தில் ஓங்கி குரல் கொடுப்போம். கோவை, திருப்பூர், நீலகிரி மற்றும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக அரசு பணியாற்ற வேண்டும்.
குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. போதை கலாச்சாரம் மிகப்பெரிய அளவில் பரவி இருக்கிறது. இதனை அரசு தடுக்க வேண்டும். முதல்வர் விஜயும் எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டும் என்று கூறியுள்ளார்.
அதிமுக மிகப்பெரிய கட்சி. நிறைய தோல்விகளை பார்த்துள்ளோம். அதை பார்த்து துவண்டு போக மாட்டோம். மீண்டும் ஜெ., எம்.ஜி.ஆர். ஆட்சி வரும் என்று கூறினார்.



