கோவை : கோவை உக்கடம் வாலாங்குளத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட மேம்பாட்டுப் பணிகளின் ஒரு பகுதியாக அமைக்கப்பட்ட ராட்சதக் குழாய் வடிவிலான ஓய்விடங்கள், சிலரின் நடவடிக்கைகளால் தற்போது இரும்புக் கம்பி தடுப்பு அமைத்து மூடப்பட்டுள்ளன.
வாலாங்குளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவில், பொதுமக்கள் அமர்ந்து ஓய்வெடுக்கும் வகையில் குகை வடிவிலான பெரிய குழாய்கள் அமைக்கப்பட்டு, அவற்றின் உள்ளே இருக்கைகளும் ஏற்படுத்தப்பட்டிருந்தன.
இந்த நிலையில், பூங்காவிற்கு வரும் சில காதல் ஜோடிகள் இந்த குழாய்களுக்குள் நீண்ட நேரம் அமர்ந்து மற்றும் படுத்துக்கொண்டு, பொது இடத்திற்கு ஏற்றதல்லாத வகையில் நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனால், பொதுமக்கள் மற்றும் குடும்பத்துடன் வரும் பார்வையாளர்கள் அந்த பகுதிக்குள் செல்லத் தயங்கியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, குகை வடிவிலான குழாய் இருக்கைகளுக்குள் பொதுமக்கள் செல்ல முடியாத வகையில், மாநகராட்சி ஊழியர்கள் இரும்புக் கம்பி தடுப்பு அமைத்து அவற்றை மூடியுள்ளனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், வாலாங்குளம் கரையோரப் பகுதிகளில் பலர் ஜோடிகளாக சுற்றித் திரிவதாகவும், சிலரின் நடவடிக்கைகள் பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்தனர்.
மேலும், அப்பகுதியில் விரும்பத்தகாத மற்றும் குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க, காவல்துறையினர் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.





