கோவை: கோவை சுந்தராபுரம் பகுதியில் கல்லூரி மாணவரை மிரட்டி லேப்டாப் மற்றும் செல்போன்களை பறித்த வழக்கில், 2 பேருக்கு தலா 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சுந்தராபுரம் பகுதியில் தேஜஸ் குமார் (21) என்பவர் தனது நண்பர்களுடன் அறை எடுத்து தங்கி கல்லூரியில் படித்து வந்தார்.
கடந்த 2024-ஆம் ஆண்டு அவரது அறைக்குள் நுழைந்த 2 பேர், தேஜஸ் குமாரை மிரட்டி 2 லேப்டாப்கள் மற்றும் 3 செல்போன்களை பறித்துச் சென்றனர்.
இதுகுறித்து தேஜஸ் குமார் அளித்த புகாரின் பேரில், சுந்தராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில், சுந்தராபுரம் மாச்சம்பாளையத்தைச் சேர்ந்த கவுதம் (23) மற்றும் குறிச்சி பகுதியைச் சேர்ந்த கமலக்கண்ணன் (27) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு கோவை குண்டுவெடிப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற இறுதி விசாரணையில், கவுதம் மற்றும் கமலக்கண்ணன் ஆகிய இருவருக்கும் தலா 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி கோகுல்முருகன் தீர்ப்பளித்தார்.
மேலும், இருவருக்கும் தலா ரூ.3 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.





