கோவை:வால்பாறை மலைப்பாதையில் வேன் கவிழ்ந்த விபத்தில் உயிரிழப்பு 10 ஆக உயர்ந்தது.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பெரிந்தல் மன்னா அருகேயுள்ள பள்ளிப்பரம்பு அரசு தொடக்கப் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் என 8 பெண்கள், டிரைவர் உட்பட 5 ஆண்கள் என மொத்தம் 13 பேர் கோவை மாவட்டம் வால்பாறைக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தனர்.
அதன்படி, கடந்த 17ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலை ஒரு வேனில் அனைவரும் புறப்பட்டனர். அவர்கள் முதலில் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள அதிரப்பள்ளி அருவிக்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து வால்பாறைக்கு வந்தனர்.
வால்பாறையில் பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்த அவர்கள், பொள்ளாச்சி வழியாக ஊர் திரும்ப முடிவு செய்தனர். சுற்றுலா வாகனத்தை டிரைவர் முகமது பாசித் (21) ஓட்டினார்.
அந்த வேன் மாலை 5 மணியளவில் வால்பாறை–பொள்ளாச்சி மலைப்பாதையில் 13வது கொண்டை ஊசி வளைவில் வந்த போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரில் மோதி மலையில் இருந்து கவிழ்ந்தது. வேன் சுமார் 800 அடி பள்ளத்தில் உருண்டு 9வது கொண்டை ஊசி வளைவு சாலையில் தலைகுப்புற விழுந்து நொறுங்கியது.
இந்த கோர விபத்தில் வேனில் பயணம் செய்த அஜிதா (54), ரம்லா (52), ஜுஹ்ரா (43), ஆஷா (41), மஜீத் (43), சஜிதா (45), ஷகிலா (37), ருகியா (39), ஹிஷாம் (12) ஆகியோர் உயிரிழந்தனர். இதில் 7 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் சம்பவ இடத்திலேயே தூக்கி வீசப்பட்டும், உடல் நசுங்கியும் உயிரிழந்தனர்.
படுகாயமடைந்த 3 பேர் கோவை அரசு மருத்துவமனையிலும், ஒருவர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர்.
அதில் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அரசு தொடக்கப் பள்ளி வேன் டிரைவர் நவுசாத் அலி (39) நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் வால்பாறை மலைப்பாதை வேன் கவிழ்ந்த விபத்தில் உயிரிழப்பு 10 ஆக உயர்ந்துள்ளது.


