கோவை: வெள்ளலூர் குப்பைக்கிடங்கு மற்றும் பாதியில் நிறுத்தப்பட்ட ஒருங்கிணைந்த பஸ் நிலையப் பணிகளை நகராட்சி நிர்வாக இயக்குனர் மதுசூதன் ரெட்டி நேரில் ஆய்வு செய்தார்.
கோவையை அடுத்த வெள்ளலூரில் ரூ.168 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், பின்னர் அந்தப் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டன. நீண்ட நாட்களாக கிடப்பில் உள்ள இந்தத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தற்போது, வெள்ளலூர் ஒருங்கிணைந்த பஸ் நிலையத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும், இந்த பஸ் நிலையத்திலிருந்து தென்மாவட்டங்கள் மற்றும் கேரளாவுக்கு பேருந்துகளை இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், நகராட்சி நிர்வாக இயக்குனர் மதுசூதன் ரெட்டி நேற்று மாலை கோவை வந்தார். பின்னர், வெள்ளலூரில் கட்டப்பட்டு பாதியில் கைவிடப்பட்ட ஒருங்கிணைந்த பஸ் நிலையப் பணிகள் நடைபெறும் இடத்தை அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதனைத் தொடர்ந்து, வெள்ளலூர் குப்பைக்கிடங்கிற்கும் சென்ற அவர், அங்கு நடைபெற்று வரும் பல்வேறு பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். குப்பைக்கிடங்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆய்வின்போது, மாநகராட்சி கமிஷனர் கட்டா ரவி தேஜா, மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதற்கிடையே, குறிச்சி – வெள்ளலூர் மாசு தடுப்பு கூட்டுக்குழுவினர் நகராட்சி நிர்வாக இயக்குனர் மதுசூதன் ரெட்டியிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில், வெள்ளலூர் குப்பைக்கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மேலும், வெள்ளலூர் குப்பைக்கிடங்கு தொடர்பாக 2018-ம் ஆண்டு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்பதும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அந்த மனுவில் இடம்பெற்றிருந்தன.





