கோவை: சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கோவையில் தகவல் தொடர்பு மையம் திறக்கப்பட்டது.
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026-ஐ முன்னிட்டு மாவட்டத்தில் 24 மணி நேரமும் வாக்காளர்களின் புகார்களை பெறும் பொருட்டும், சந்தேகங்களுக்கு தீர்வு காணும் வகையில் தகவல்கள் வழங்கும் பொருட்டு மாவட்ட தொடர்பு மையத்தினை (District Contact Centre) மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான பவன்குமார் வைத்து பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) சங்கேத் பல்வந்தி வாகே ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, எதிர்வரும் தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026-ஐ முன்னிட்டு கோயம்புத்தூர் மாவட்டத்தில் 24 மணி நேரமும் வாக்காளர்களின் புகார்களை பெறும் பொருட்டும் சந்தேகங்களுக்கு தீர்வு காணும் வகையில் தகவல்கள் வழங்கும் பொருட்டும் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தொடர்பு மையம் (District Contact Centre) அமைக்கப்பட்டுள்ளது. இம்மையமானது இன்று முதல் 24 மணி நேரமும் செயல்பட உள்ளது.
இதற்காக 12 தொழிற்நுட்பப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் வாக்காளர் அடையாள அட்டை வாக்காளர் பட்டியல் மற்றும் தேர்தல் நடைமுறை தொடர்பான வாக்காளர்களின் சந்தேகங்களுக்கு தீர்வு காணும் வகையில் பணியாற்ற உள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் வசிக்கும் வாக்காளர்கள் அனைவரும் 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு 24 மணி நேரமும் தங்களுக்குத் தேவையான தகவல்களை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

