கோவை: கோவையில் பணிக்கு சேர்ந்த 15 நாட்களில் ஓட்டல் உரிமையாளரின் காரை காய்கறிகளுடன் திருடி சென்ற தந்தை, மகனை போலீசார் தேடி வருகின்றனர்.
வடவள்ளி கஸ்தூரிநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (49). இவர் பீளமேடு கருணாநிதி நகர் தனியார் மருத்துவமனை அருகே ஓட்டல் நடத்தி வருகிறார்.
இவரது ஓட்டலில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு செங்கல்பட்டை சேர்ந்த கந்தன் (58) மற்றும் அவரது மகன் சதீஷ் (36) ஆகியோர் பணிக்கு சேர்ந்துள்ளனர். இந்த நிலையில் ஓட்டலில் காய்கறி உட்பட பொருட்கள் வாங்க ஒரு கார் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அதன் டிரைவராக விக்னேஷ் என்பவர் இருந்து வருகிறார். நேற்று முன்தினம் மதியம் விக்னேஷ் காரில் மார்க்கெட்டுக்கு சென்று காய்கறிகளை வாங்கி வந்து ஓட்டல் முன் நிறுத்தினார். அதில் தனது செல்போனையும் வைத்து விட்டு ஓட்டலுக்குள் சென்றார்.
சிறிது நேரம் கழித்து பிரகாஷ் வெளியே வந்து பார்த்த போது கார் மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே விக்னேசை அழைத்து கார் குறித்து கேட்டார். அதற்கு அவர் தான் காரை எங்கும், எடுத்து செல்லவில்லை, ஓட்டல் முன் தான் நிறுத்தி இருந்தேன் என தெரிவித்தார்.
அதன் பின்னர் பிரகாஷ் அங்கு பொருத்தப்பட்டு இருந்த சிசிவிடி கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தார். அதில் ஓட்டலில் பணிபுரிந்து வந்த தந்தை மகன் கந்தன், சதீஷ் ஆகியோர் காரை காய்கறிகளுடன் திருடி சென்றது தெரியவந்தது.
இதையடுத்து பிரகாஷ் பீளமேடு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து காரை செல்போன், காய்கறியுடன் திருடி சென்ற தந்தை, மகனை தேடி வருகின்றனர்.

