கோவை: கோவையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 28 வயது இளம்பெண்ணைக் கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 10 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர்.
சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப்பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்டக் காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
கருமத்தம்பட்டி காவல்துறையினருக்குக் கஞ்சா விற்பனைக்கு வைத்திருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், காவல்துறையினர் கருமத்தம்பட்டி வேட்டைக்காரன் குட்டை பிரிவு அருகில் சென்று சோதனை மேற்கொண்டனர்.
அப்போது கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த இஸ்மேதரா காதும் (28) என்ற பெண்ணைக் கைது செய்தனர்.
மேலும், அவரிடமிருந்து சுமார் 10 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திக் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இதுபோன்று போதைப்பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராகச் செயல்பட்டாலோ, ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.

