கோவை: கோவையில் நடைபெற்ற கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு கண் கண்ணாடிகளை வழங்கினார்.
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள மாசானிக் குழந்தைகள் நல மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில், கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் கண் கண்ணாடிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் கீதாஞ்சலி, இணை இயக்குநர் (மருத்துவ நலப்பணிகள்) சுமதி, மாவட்ட சுகாதார அலுவலர் பாலுசாமி, கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர், மற்றும் மாநகர் நல அலுவலர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
மாவட்ட ஆட்சித்தலைவரின் முன்னெடுப்பில் சிறப்பு கண்மருத்துவ முகாம் கடந்த 21.04.2025 அன்று மதுக்கரை வட்டாரத்தில் மாவட்ட ஆட்சித்தலைவரால் துவக்கி வைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து 12 வட்டாரங்களில் 41 சிறப்பு கண்மருத்துவ முகாம்கள் நடைபெற்றது. மேலும், நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் 40 மருத்துவ முகாம்கள், மக்கள் குறைதீர்க்கும் திட்டத்தின் கீழ் 8 மருத்துவ முகாம்கள், உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் 333 மருத்துவ முகாம்கள் என மொத்தம் 422 சிறப்பு கண் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டது.
இம்முகாம்களில் 70,512 நபர்களுக்கு கண்பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இவர்களில் 5138 நபர்களுக்கு பார்வை குறைபாடுகள் கண்டறியப்பட்டது. இதில் 1284 நபர்களுக்கு கண்புரை நோய் உள்ளது கண்டறியப்பட்டு அதில் 1176 நபர்களுக்கு கண்புரை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
மேலும், இம்முகாம்களில் புதிய இரத்த அழுத்தம் நோய் அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 329. புதிய சர்க்கரை நோய் அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 210, இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் இரண்டும் சேர்த்து உள்ளவர்களின் எண்ணிக்கை -125 ஆகும்.
அதனைத்தொடர்ந்து, இச்சிறப்பு இலவச கண்சிகிச்சை முகாம்களில் கண் பரிசோதனை மேற்கொண்ட பார்வை குறைபாடுள்ள மருத்துவ பயனாளிகளுக்கு இலவச கண்கண்ணாடி வழங்கும் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் மாசானிக் குழந்தைகள் நல மருத்துவமனையில் நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து பார்வைக் குறைபாடுள்ள கண் பரிசோதனை முகாம்களில் கண்டறியப்பட்ட சுமார் நூறு மருத்துவ பயனாளிகளுக்கு இலவசக் கண்கண்ணாடிகள் மாவட்ட ஆட்சித்தலைவரால் வழங்கப்பட்டது.

