டெல்லி: தமிழ்நாட்டில் ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த 2021ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று, மே 7ம் தேதி திமுக ஆட்சி தொடங்கியது. இதனிடையே வரும் மே மாதம் 10ம் தேதியுடன் ஆட்சிக்காலம் நிறைவடைகிறது.
தமிழகத்தைப் போலவே, புதுச்சேரி, அசாம், கேரளா, மேற்குவங்காளம் ஆகிய 5 மாநிலங்களில் இந்தாண்டு ஆட்சிக்காலம் முடிகிறது. இந்த ஐந்து மாநிலங்களுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.
இதனிடையே தேர்தல் நடைபெறும் தேதிகளை இன்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அறிவித்தார்.
அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் மார்ச் 30ம் தேதி முதல் தொடங்குகிறது.
வேட்புமனுவை தாக்கல் செய்ய ஏப்ரல் 6ம் தேதி கடைசி நாள். வேட்புமனு பரிசீலனை ஏப்ரல் 7ம் தேதி நடைபெறுகிறது. வேட்புமனுக்களை திரும்பப்பெற ஏப்ரல் 9ம் தேதி கடைசி நாள்.
வாக்கு எண்ணிக்கை மே 4ம் தேதி நடைபெறுகிறது. புதுச்சேரியில் ஏப்ரல் 9ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருகிறது.
இவ்வாறு தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

