கோவை: அநீதி நடக்கிறது என்று தெரிந்தும், அதையே மீண்டும் செய்பவர்களே எப்படி ஆட்சிக்கு வருகிறார்கள் என்று கேள்வி எழுப்பிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், வாக்காளர்கள் மீதும் ஆவேசமாக கருத்து தெரிவித்துள்ளார்.
கோவை புலியகுளம் விநாயகர் கோவில் அருகே, கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பேரறிவாளனை ஆதரித்து, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அநீதிக்கு எதிராக சீமான் கேள்வி
அப்போது பேசிய அவர், “அன்பு சொந்தங்களுக்கு வணக்கம். புலியகுளம் விநாயகரிடம் சங்கத் தமிழை தாய் என்று கேட்டார்கள்; அதையே நானும் கேட்கிறேன். எங்களுடைய தமிழை எங்களுக்குத் தா என்று கேட்கிறேன்” என்றார்.
Read news: கோவை திமுகவில் மீசை வைத்த ஆம்பிளைகள் இல்லை- கே.ஆர்.ஜெயராம் பிரச்சாரம்…
“இதுவரை எத்தனையோ தேர்தல்கள் நடந்துள்ளன. ஆனால் எந்த மாற்றமும் நடக்கவில்லை. அதே லஞ்சம், ஊழல், கொலை, கொள்ளை, பசி, பஞ்சம், ஏழ்மை, வறுமை, சாதி இழிவு, தீண்டாமை, பாலியல் வன்கொடுமை தான் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இவை எதுவும் மாறியதாக தெரியவில்லை” என்று தெரிவித்தார்.
“அநீதி நடக்கிறது என்று தெரிகிறது. அனைத்து துறையினரும் வீதியில் இறங்கி போராடுகிறார்கள். இத்தனை போராட்டங்களை மக்களுக்குள் திணித்தவர்கள், மீண்டும் மீண்டும் எப்படி அதிகாரத்திற்கு வருகிறார்கள்?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
ஆட்சிக்கு கடும் விமர்சனம்
“நமக்கு போராட்டமே வாழ்க்கையாக மாறிவிட்டது. அனைத்திற்கும் போராட வேண்டிய நிலையை நம்முடைய ஆட்சியாளர்கள் நமக்கு தந்திருக்கிறார்கள். கல்வி, வேலைவாய்ப்பு, சம்பளம் போன்றவை தான் அடிப்படை. ஆனால் இவற்றில் எதையும் முழுமையாக நிறைவேற்றாமல், கடன் மட்டுமே வாங்கியுள்ளனர். இவர்கள் வளர்ச்சி என்று காட்டுவது, கட்டமைப்பது எல்லாம் கடன் வளர்ச்சிதான்” என்று விமர்சித்தார்.
“இந்த ஐந்து ஆண்டுகளில் 4.5 லட்சம் கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளனர். அப்படி கடன் பெற்று நிறைவேற்றிய திட்டம் எதையாவது சொல்ல முடியுமா?” என்றும் கேள்வி எழுப்பினார்.
Read news:தொகுதி மாறிய நயினார்… இதுதான் காரணமா?
“நாட்டில் உயர்ந்த அதிகாரத்தில் இருப்பவனே திருடுகிறான், ஊழல் செய்கிறான், லஞ்சம் பெறுகிறான், அதற்காக தண்டனை பெற்று சிறைக்கு செல்கிறான் என்றால், நாடு எந்த நிலையில் இருக்கும் என்பதை அறிவுச் சமூகமாவது யோசித்துப் பார்க்க வேண்டும்” என்றார்.
“உலகம் போற்றிக் கொண்டாடிய ஒரு இனம், முதலில் நாகரிகம் அடைந்த ஒரு இனம், சுயமரியாதைக்காக அரசியல் இயக்கம் கண்ட ஒரு இனம், இன்று அவமரியாதையின் சின்னமாக அலைகிறது. இலவசங்களுக்கு ஏங்கி நிற்கிறது” என்று அவர் கூறினார்.
விஜயை நேரடியாக சாடிய சீமான்
“தம்பி விஜய் கரூருக்கு சென்றார். அவரைப் பார்க்க வந்த 41 பேர் உயிரிழந்தனர். அந்த மக்கள்மீது பாசம் இருந்தால், அந்த மக்களுக்காகவாவது கரூரில் ஏன் போட்டியிடவில்லை?” என்றும் விமர்சித்தார்.
“ஒரு தலைவன் முதல்முறையாக அரசியல் களத்திற்கு வருகிறார். தன்னை ஹீரோ என்கிறார், உச்சத்தில் இருந்து இறங்கி வந்துள்ளேன் என்கிறார், நான் மாஸ், நான் பிளாஸ்ட் என்கிறார். ஆனால் தன் மீதும் நம்பிக்கை இல்லாமல், மக்கள் மீதும் நம்பிக்கை இல்லாமல் ஒரே நேரத்தில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார்” என்று விஜயை சாடினார்.
“ஒரு கதாநாயகன் வெற்றி நிச்சயம் என்று உறுதியாக இருந்தால், எதற்காக இரண்டு தொகுதிகளில் போட்டியிட வேண்டும்? இந்த ஜனநாயகத்தில் இன்னொருவருக்கு இருக்கக்கூடிய வாய்ப்பை ஏன் பறிக்க வேண்டும்? இது காலக்கொடுமை” என்றும் கூறினார்.
“இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவது என்பது, தன் மீதும் நம்பிக்கை இல்லை, மக்கள் மீதும் நம்பிக்கை இல்லை என்பதை காட்டுகிறது” என்று அவர் குறிப்பிட்டார்.
வாக்குக்கு காசு குறித்து எச்சரிக்கை
“வாக்குக்கு காசு கொடுக்கும் மரபை எப்போது என் மக்கள் சகிக்கத் தொடங்கினார்கள்? ஒரு நேர்மையானவன் நல்ல ஆட்சி தர வேண்டும், தன்னலமற்ற சேவை செய்ய வேண்டும் என்று நினைப்பவன், எதற்காக வாக்குகளுக்கு காசு கொடுக்க வேண்டும்?” என்று வினவினார்.
“நாங்கள் வாக்குகளுக்கு பணம் தரவில்லை. இருந்தாலும் எங்களுக்கு வாக்குகள் செலுத்துகிறார்கள். வாக்குகளுக்கு காசு கொடுக்காமலேயே மக்கள் எங்களை மூன்றாவது பெரிய கட்சியாக ஆக்கியுள்ளனர் என்றால், இந்த மண்ணில் நல்ல ஆட்சியை விரும்பும் மக்கள் இன்னும் செத்துப் போகவில்லை என்பதற்கே அது சாட்சி” என்றார்.
“இங்கு செந்தில் பாலாஜி போட்டியிடுகிறார், அவர் போட்டியிடுகிறார், இவர் போட்டியிடுகிறார் என்பதல்ல. என் மகன் பேரறிவாளன் போட்டியிடுகிறார்; நாம் தமிழர் கட்சி போட்டியிடுகிறது. ஓட்டுக்கு காசு என்பது பச்சைத் துரோகம்; ஜனநாயக படுகொலை. அதை எதிர்க்கும் நாங்கள் ஒரு பக்கம் நிற்கிறோம்” என்றார்.
பேரறிவாளனுக்கு ஆதரவு கோரல்
“எனக்கு அதிகாரம் கொடுப்பது என்பது உனக்கு அதிகாரம் கொடுப்பதற்கு சமம். பேரறிவாளனின் வெற்றி உன்னுடைய வெற்றி” என்று கூறினார்.
“ஏப்ரல் 23ஆம் தேதி உலகம் திரும்பிப் பார்க்கக் கூடிய மாற்றம் உங்கள் கையில்தான் உள்ளது. வரலாற்றில் புரட்சிகரமான ஒரு முடிவை நீங்கள் எழுத வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.
“திமுக வெல்வதோ, காங்கிரஸ் வெல்வதோ, பாஜக வெல்வதோ, அதிமுக வெல்வதோ ஒரு சாதாரண நிகழ்வு; ஊடகங்களில் ஒரு செய்தி மட்டுமே. ஆனால் நாங்கள் வெல்வது வரலாற்றுப் பதிவு; சரித்திரத்தில் போற்றத்தக்க சாதனை” என்று சீமான் தனது பேச்சை முடித்தார்.

