கோவை: கோவையில் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்று காலை 7 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளுக்கும் 3540 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு, பொதுமக்கள் தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.
போலீசார் மற்றும் சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்புடன் இந்த தேர்தல் நடைபெற்று வருகிறது.
வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்று வரிசையில் நின்று தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் இன்று காலை கோவை அரசு கலைக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு தனது மனைவி சின்மதியுடன் வந்தார். பொதுமக்களுடன் வரிசையில் நின்ற அவர் தனது வாக்கை பதிவு செய்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், “கோவையில் பொதுமக்கள் சிரமமின்றி, பாதுகாப்பாக வாக்களிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. வாக்கு செலுத்த வரும் வாக்காளர்கள் ஒரு புதுமையான அனுபவத்தை பெறும் வகையில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களும் பொலிவுபடுத்தப்பட்டுள்ளன.
ஒரே மையத்தில் பல்வேறு வாக்குச்சாவடிகள் அமைந்திருப்பின், அங்கு பிங்க், நீலம் உள்ளிட்ட வண்ணங்கள் மூலம் அந்த குறிப்பிட்ட வாக்குச்சாவடிகள் அடையாளம் காட்டப்பட்டுள்ளன. முதல்முறை வாக்காளர்கள் அனைவரும் தங்களது ஓட்டுகளை பதிவு செய்ய வர வேண்டும். காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். மாலை 6 மணிக்கு வரும் பொதுமக்களுக்கும் டோக்கன் வழங்கப்படும். அதன் மூலம் அவர்களும் வாக்கு செலுத்த முடியும்” என்றார்.


