கோவை: ஜிடி மேம்பாலத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தம் பணிகள் நடைபெற உள்ளதால் இன்றும் நாளையும் மேம்பாலத்தை பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது.
கோவை உப்பிலிப்பாளையம் முதல் சின்னியம்பாளையம் வரை உள்ள ஜிடி உயர்மட்ட மேம்பாலத்தில் இளைஞர்கள் சிலர் அதிவேகமகா பயணித்து விபத்தில் சிக்குவதாக புகார் எழுந்தது.
இதனால் இரவு நேரங்களில் கோவையில் உள்ள முக்கிய மேம்பாலங்களை மூட போலீசார் முடிவெடுத்தனர். ஆனால், முன் கூட்டியே மேம்பாலங்கள் பேரிகார்டுகள் கொண்டு அடைக்கப்பட்டன.
இதனால் மாநகர் முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இந்த நிலையில், மேம்பாலங்கள் இரவு நேரங்களில் மூடப்படும் திட்டத்தை போலீசார் கைவிட்டனர்.
தடை
இதனிடையே அதிகவேகமாக பயணிக்கும் வாகனங்களுக்கு ஏஐ கேமராக்கள் மூலம் அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டு சோதனை அடிப்படையில் கண்காணிப்புக் கேமராக்கள் பொறுத்தப்பட்டன. இந்த சூழலில், தற்போது மீண்டும் கேமிராக்கள் பொருத்தும் பணிகள் நடைபெற உள்ளன.
Also Read: கோவையில் நிர்வாண வீடியோவை அனுப்பி மாணவரிடம் பணம் பறிப்பு; கவனமாக இருங்கள் இளைஞர்களே…
இதனால், இன்று (25ம் தேதி) மற்றும் நாளை (26ம் தேதி) ஆகிய இரு தினங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற உள்ளதால் ஜிடி உயர்மட்ட மேம்பாலத்தில், இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை அனைத்து விதமான வாகனப் போக்குவரத்துகளும் முற்றிலுமாக தடை செய்யப்படுகிறது.
எனவே இரண்டு தினங்களில் இரவு 10 மணி முதல் காலை 6 வரை மட்டும் வாகன ஓட்டிகள் உயர்மட்ட மேம்பாலத்தினை உபயோகப்படுத்தாமல் அவிநாசி சாலையை பயன்படுத்துமாறு கோவை மாநகர காவல்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


