சிபிஐ க்கு மாற்றப்பட்ட மின்மாற்றி வழக்கு- செந்தில்பாலாஜி கூறும் விளக்கம்…

கோவை: சிபிஐ விசாரணைக்கு மின்மாற்றி வழக்கு மாற்றப்பட்டது குறித்து செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

Advertisement

கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். மின்மாற்றி வழக்கு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது குறித்து செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

அப்போது பேசிய அவர், தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு மின்மாற்றுகள் கொள்முதல் செய்வதில் தவறுகள் நடந்திருக்கிறது என்று ஒரு அமைப்பு புகார் அளித்து நீதிமன்றத்தில் அந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இன்று அந்த வழக்கை உயர் நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. அது குறித்து சில விளக்கங்களை அளிப்பது என்னுடைய கடமை என்று தெரிவித்தார்.

மின்சார வாரியத்தைப் பொருத்தவரை மின்மாற்றிகள் கொள்முதல் என்பது 1987ஆம் ஆண்டு தொடங்கி அன்று எந்த நடைமுறைகள் பின்பற்றப்பட்டதோ அதே நடைமுறைகள்தான் தற்போது பின்பற்றப்பட்டு வருகிறது என்றார். ஒரு டெண்டர் quote செய்யும் போது 20, 30 பேர் அதில் கலந்து கொள்வார்கள். அதில் L1, L2, L3 quote செய்வார்கள். அதில் சிலவை ஒரே தொகையாக இருக்கும்.

Advertisement

பொதுவாக மின்சார வாரியத்தில் L1 தொகையை யார் மேட்ச் செய்து கொடுக்கிறார்களோ அவர்களுக்கு அந்த டெண்டரை பிரித்துக் கொடுப்பார்கள் என்றும், இதுதான் மின்சார வாரியத்தில் நடைமுறை என்றும், அதுதான் தற்போது வரை பின்பற்றப்பட்டு வருவதாக தெரிவித்தார். அது தவிர ஸ்கிரூட்டினி கமிட்டி, போர்டு கமிட்டி உள்ளிட்ட மூன்று கமிட்டிகள் சேர்ந்துதான் இறுதி முடிவு எடுப்பார்கள் என்றும் கூறினார். குறிப்பிட்ட அந்த ஒரு அமைப்பு ஏதோ இந்த நான்கு, ஐந்து ஆண்டுகளில் தவறுகள் நடந்ததைப் போன்று பிரித்தெடுத்து நீதிமன்றத்தில் வழக்கை தாக்கல் செய்துள்ளதாக கூறினார்.

நான் அந்தப் பொறுப்பை பார்த்ததால் எந்த ஒரு இடத்திலும் அரசு நிர்வாகத்திற்கு தவறு நடக்கவில்லை. அரசுக்கு ஒரு நையா பைசா கூட இழப்பு ஏற்படவில்லை என்று தெரிவித்தார். சிபிஐ விசாரணை நியாயமாக நடக்குமா, நடக்கவில்லையா என்பதை விசாரணை நடக்கும் போது பொறுத்திருந்து பார்க்கலாம் என்றும், அதிமுக கூட சிபிஐ விசாரணைக்கு தடை வாங்கியுள்ளது என்று தெரிவித்தார்.

Advertisement

இன்னும் நீதிமன்றத்தில் இருந்து முழு உத்தரவு வரவில்லை என்று குறிப்பிட்ட செந்தில் பாலாஜி, இந்த முழு உத்தரவு வந்த பிறகுதான் அதற்குள் என்னென்ன உள்ளது என்பது பற்றி தெரியும் என்றும் கூறினார். மேலும், தான் இதை நெருக்கடியாக பார்க்கவில்லை என்றும், அந்த புகார் அளித்த அமைப்பு இந்த நான்கு ஆண்டுகளை மட்டும் மேற்கோள் காட்டி தவறு நடந்துள்ளதாக கூறுகிறார்கள்; ஆனால் அதற்கு முன்பு நடந்ததை அவர்கள் மறைத்து அவற்றையெல்லாம் கூறவில்லை என்றும், அவர்கள் ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு உள்ளார்கள் என்றும் தெரிவித்தார். மேலும், அந்த அமைப்பினர் கடந்த அரசை பற்றி எதுவும் கூறாமல் எங்கள் அரசின் மீது மட்டும் குற்றச்சாட்டை முன்வைப்பதாகவும் தெரிவித்தார்.

எஸ்.பி. வேலுமணி மீது அந்த அமைப்பு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தாலும், அதனை தொடர்ந்து அவர்கள் எதுவும் பேசவில்லை என்றும், அத்துடன் அதனை முடித்து விட்டார்கள் என்றும் தெரிவித்தார்.

இதுகுறித்து மேல்முறையீடு செய்யப்படுமா என்ற கேள்விக்கு தற்போது வரை அது குறித்து முடிவெடுக்கவில்லை என்றும், வழக்கறிஞர்களுடன் பேசி முடிவெடுக்கப்படும் என்று பதில் அளித்தார். மக்கள் மன்றத்தில் தங்களை வீழ்த்த முடியாதவர்கள் நீதிமன்றத்திற்கு செல்வதாகவும், வழக்கு தாக்கல் செய்யப்பட்டதால் மட்டுமே ஒருவர் குற்றவாளி என்பது போல காட்ட முயற்சிக்கிறார்கள் என்றும், அதிமுக மற்றும் பாஜகவினர் வழக்கு தாக்கல் செய்ததை மட்டும் வைத்துக்கொண்டு குற்றவாளி என்பது போல பேசி வருகிறார்கள் என்றும் தெரிவித்தார்.

தற்போது கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடக்கூடிய பாஜக வேட்பாளர் (வானதி சீனிவாசன்), முன்பு தெற்கு தொகுதியில் இருந்தபோது என்னை பற்றி சில கருத்துக்களை கூறியிருந்தார்; கடுமையான வார்த்தைகளையும் பயன்படுத்தி இருந்தார் என்று கூறிய அவர், நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பிரதமரும் உள்துறை அமைச்சரும் அதிமுக மற்றும் எடப்பாடி பழனிச்சாமி குறித்து பேசியதை எண்ணிப் பார்க்க வேண்டும் என்றும் அதன் பின் எங்களைப் பற்றி பேசலாம் என்றும் தெரிவித்தார்.

வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட போது குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட தண்டனை வழங்கியதைப் போல பேசுவது ஏற்புடையது அல்ல என்றும் தெரிவித்தார். மேலும், அதிக அரசியல் பிரமுகர்கள் மீது வழக்குகள் உள்ளன என்றும், உதாரணமாக அரவிந்த் கெஜ்ரிவால் மீதும் வழக்கு தொடரப்பட்டது; பின்னர் அது என்ன ஆனது என்று அனைவருக்கும் தெரியும் என்றும் கூறினார்.

தேர்தலில் வாக்களிக்காதது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், நான் அன்று மூன்று மணிக்கு கிளம்பி சென்று வாக்களிக்க வேண்டும் என்று நினைத்தேன்; ஆனால் கோவையில் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் செல்லும் போது அதிமுகவினர் பூத்தில் உள்ளேயே இருந்தார்கள், ஏஜென்ட் ஆக இல்லாதவர்களும் அங்கு இருந்தார்கள் என்றும், கடந்த இரண்டு, மூன்று தினங்களாக சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் விதத்தில் ஈடுபட்டதாகவும், தேர்தலை நிறுத்த வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியதாகவும் தெரிவித்தார்.

தேர்தல் முடியும் கடைசி இரண்டு மணி நேரத்திற்கு முன்பு பரபரப்பான சூழல் இருந்த காரணத்தினால்தான் நான் அங்கு சென்று வாக்களிக்க இயலவில்லை என்றும் தெரிவித்தார்.

பதற்றம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக முழுமையாக இங்கு இருந்தேன் என்றும் தெரிவித்தார். அங்கு சென்ற பின் ஒரு பதற்றம் ஏற்பட வேண்டுமா என்பதை நான் தான் முடிவு எடுக்க வேண்டும்; அது என்னுடைய உரிமை என்றும் தெரிவித்தார். வாக்களிப்பதும் கடமை; நான் போட்டியிடும் தொகுதியில் பதற்றம் ஏற்பட்டு விடக்கூடாது என்று பார்த்துக் கொள்வதும் என்னுடைய கடமை. அப்படி இருக்கும் போது நான் கிளம்பும் போது பதற்றம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகத்தான் நான் வாக்களிக்க செல்லவில்லை என்றும் தெரிவித்தார்.

கோவை தெற்கு தொகுதியில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த சுயேட்சை வேட்பாளர்கள் 18 பேர் வேட்பு மனுதாக்கல் செய்தது தொடர்பான கேள்விக்கு, நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்தவர்கள் எல்லாம் எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்று கேள்வி எழுப்பினார். தேர்தலில் போட்டியிடுவது என்பது அவர் அவர் விருப்பம்; என்னை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக கூட அவர்கள் இங்கு நின்று இருக்கலாம் என்றும், கரூரில் நான் போட்டியிடாமல் இங்கு போட்டியிடுவதால் கூட அவர்கள் இங்கு போட்டியிட்டு இருக்கலாம் என்றும் வைத்துக் கொள்ளலாம் என்று கூறினார்.

திமுகவில் பொறுப்பில் உள்ளவர்கள் அப்படி வேட்பு மனு தாக்கல் செய்ய மாட்டார்கள்; அவ்வாறு செய்தால் தலைமை உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்தார்.

இந்த செய்தியாளர் சந்திப்பு சிபிஐ விசாரணை பற்றியது என்றும், அதனை பொருத்தவரை அரசுக்கு ஒரு பைசா கூட இழப்பு ஏற்படவில்லை என்றும், அந்த அமைப்பு அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக செயல்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். நீதிமன்றத்தில் இது குறித்து உரிய விளக்கங்களை நாங்கள் அளிப்போம் என்றும் தெரிவித்தார்.

உறுதியாக தமிழ்நாட்டில் இரண்டாவது முறையாக முதல்வர் ஆட்சி பொறுப்பில் ஏற்பார் என்றும், கோவையில் 10 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் தோழமை இயக்கங்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளோம் என்றும் தெரிவித்தார்.

தேர்தலை நிறுத்த வேண்டும் என்று அதிமுகவினர் போராட்டம் நடத்தியது தொடர்பான கேள்விக்கு, தோல்வி பயத்தால் எவ்வாறு நடந்து கொண்டார்கள் என்றும், தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைப்பார்கள் என்றும், ஆனால் அந்த குற்றச்சாட்டுகளை நிரூபிக்க வேண்டும் அல்லவா என்றும் தெரிவித்தார்.

ஓய்வு பெற்ற நீதிபதி கிருபாகரன் அண்மையில் பேசியிருந்தது தொடர்பான கேள்விக்கு, ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்துகளை முன்வைப்பார்கள்; நான் அதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றார். எங்களைப் பொருத்தவரை வாக்காளர்கள் தங்கள் வெற்றி பெறக்கூடிய வாக்குகளை செலுத்தியுள்ளனர் என்றும் தெரிவித்தார்.

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தேர்தலுக்கு முன்பு நடைபெற்ற பரப்புரையில் செந்தில் பாலாஜியை அடிமை என்று விமர்சித்தது தொடர்பான கேள்விக்கு, கரூரில் நடைபெற்ற ஒரு கூட்டம் அவர்களுடைய கூட்டம் தான்; 41 பேர் இறந்தனர், பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அப்படி இருக்கும் போது கூட்டத்தை நடத்தியவர்கள் ஓடி விட்டார்கள்; நாங்கள்தான் மருத்துவமனைக்கு சென்றோம்; பிற கட்சியினரும் வந்தார்கள், அதனை மறுக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

மக்களைப் பற்றி சிந்திக்காதவர்கள் பற்றியும், அந்த சம்பவத்தில் விட்டு விட்டு ஓடியவர்கள் பற்றியும் பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.

தேர்தல் முடிவுகளுக்கு பிறகு கோவை தெற்கு தொகுதியில் உள்ள 11 வார்டுகளிலும் 11 எம்எல்ஏ அலுவலகங்களை அமைக்க போகிறோம் என்றும், அதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது என்றும் தெரிவித்தார்.

இந்த தேர்தலை புதுமையான தேர்தல் என்று பார்க்கவில்லை என்றும், நாடாளுமன்றத் தேர்தலில் 45 விழுக்காடு வாக்குகளை பெற்றுள்ளோம்; தற்போது அதைவிட கூடுதலாக பெறுவோம் என்றும், 45 விழுக்காட்டிற்கு கீழ் சென்றால் வாக்கு சதவிகிதம் பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறலாம் என்றும், அதற்கு மேல் தான் நாங்கள் செல்வோம் என்றும் தெரிவித்தார்.

மீதமுள்ள 55 சதவிகிதத்தை யார் பிரித்தாலும் எங்களுக்கு என்ன, அதைப் பற்றி நாங்கள் ஏன் கவலை கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மின்மாற்றி வழக்கு தொடர்பாக மேல்முறையீடு செய்வது குறித்து வழக்கறிஞருடன் பேசி முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Amazon Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

இந்த அரசு கருணை காட்டாது- அமைச்சர் அருண்ராஜ் குறிபிட்ட விஷயம்…

கோவை: உறுப்பு மாற்று சிகிச்சையில் தவறு செய்தால் இந்த அரசு கருணை காட்டாது என நாமக்கல் கிட்னி திருட்டை குறிபிட்டு அமைச்சர் அருண்ராஜ் எச்சரித்துள்ளார். கோவை அவிநாசி சாலையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில்...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...