ஹைதராபாத்: நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பை பாதுகாக்க மக்கள் பங்களிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். அதற்காக தேவையற்ற தங்க நகை வாங்குதலை குறைக்கவும், சமையல் எண்ணெய் பயன்பாட்டை கட்டுப்படுத்தவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
தெலங்கானாவில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி மற்றும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் மோடி, உலகளவில் நிலவி வரும் போர் மற்றும் பொருளாதார நெருக்கடி இந்தியாவையும் பாதித்துள்ளதாக கூறினார்.
“இந்தியா எரிபொருள் தேவைகளில் பெரும்பகுதியை வெளிநாடுகளை நம்பியே பூர்த்தி செய்கிறது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக பெட்ரோல், டீசல், எரிவாயு மற்றும் உரங்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இருப்பினும் பொதுமக்கள் மீது அதிக சுமை ஏற்படாமல் இருக்க அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது,” என்று அவர் தெரிவித்தார்.
அந்நிய செலாவணியை அதிகமாக செலவழிக்கச் செய்யும் பொருட்களில் தங்கமும் முக்கியமானது என்று குறிப்பிட்ட பிரதமர், “நாட்டின் பொருளாதார நலனை கருத்தில் கொண்டு மக்கள் ஒரு வருடத்திற்கு தங்கம் வாங்குவதை தவிர்க்கலாம். இது நாட்டின் நிதி நிலையை பாதுகாக்க உதவும்,” என்றார்.
மேலும், சமையல் எண்ணெய் இறக்குமதிக்கும் பெரிய அளவில் வெளிநாட்டு நாணயம் செலவாகிறது என்பதால், குடும்பங்கள் எண்ணெய் பயன்பாட்டை குறைத்தால் அது உடல்நலத்திற்கும் பொருளாதாரத்திற்கும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் மோடி கூறினார்.
“தேசப்பற்று என்பது எல்லையில் போராடுவது மட்டும் அல்ல. நாட்டின் தேவையை புரிந்து கொண்டு பொறுப்புடன் நடந்து கொள்வதும் தேசப்பற்றின் ஒரு வடிவம்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
பிரதமரின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி. வேணுகோபால், “பொருளாதார சவால்களை சமாளிக்க உறுதியான திட்டங்களை கொண்டு வருவதற்கு பதிலாக, அதன் சுமையை மக்கள்மீது தள்ளுவது சரியான அணுகுமுறை அல்ல,” என்று விமர்சித்தார்.
இந்நிலையில், உலகளவில் நிலவும் அரசியல் பதற்றம் மற்றும் பொருளாதார அசாதாரண சூழ்நிலை காரணமாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை மக்கள் அதிகம் தேர்வு செய்வதும், பல நாடுகளின் மத்திய வங்கிகள் தங்க கையிருப்பை உயர்த்துவதும் விலை உயர்வுக்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன.


