கோவை : 16 ஆண்டுகளாக மன அழுத்தத்துக்கு சிகிச்சை பெற்று வந்த ஜவுளிக்கடை ஊழியர், குணமடையாத விரக்தியில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோவையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை கணபதி நேரு நகர் 3வது வீதியைச் சேர்ந்தவர் சரவண பாஸ்கர் (45). இவர் கடந்த 25 ஆண்டுகளாக ஜவுளிக்கடையில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி மகாலட்சுமி (45).
சரவண பாஸ்கருக்கு நீண்ட காலமாக மன அழுத்த பாதிப்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக அவர் கடந்த 16 ஆண்டுகளாக இ.எஸ்.ஐ மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
ஆனால் பல ஆண்டுகளாக சிகிச்சை பெற்றும் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால், அவர் மிகுந்த மனவேதனையில் இருந்து வந்ததாக தெரிகிறது. இதன் காரணமாக வாழ்க்கையில் விரக்தியடைந்த சரவண பாஸ்கர், நேற்று முன்தினம் வீட்டில் இருந்தபோது விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
சிறிது நேரத்தில் அவர் வாந்தி எடுத்து மயங்கிய நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், உடனடியாக அவரை மீட்டு அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சரவண பாஸ்கர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


