கோவை: கோவை மாநகராட்சி அலுவலகத்தில் 2 மாத இடைவெளிக்குப் பிறகு இன்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.
கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் மேயர் ரங்கநாயகி தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்று வந்தது.
இந்தக் கூட்டத்தில் பொதுமக்கள் குடிநீர், சாலை, மின் வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகள் மற்றும் தங்களது பகுதிசார் பிரச்னைகள் தொடர்பாக மனுக்கள் அளித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த மார்ச் 11ஆம் தேதி கடைசியாக மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து மார்ச் 15ஆம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் மக்கள் குறைதீர் கூட்டம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.
தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் வாபஸ் பெறப்பட்டுள்ள நிலையில், 2 மாதங்களுக்கு பிறகு இன்று மீண்டும் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத்தில் பொதுமக்கள் தங்களது பகுதிகளில் நிலவும் பிரச்னைகள் குறித்து மனுக்கள் அளித்து பயன்பெறலாம் என மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.



