கோவை: கோவையில் குப்பையில் தவறுதலாக வீசப்பட்ட 3 பவுன் தங்கச் சங்கிலியை நேர்மையுடன் உரிமையாளரிடம் ஒப்படைத்த மாநகராட்சி தூய்மைப் பணியாளர் சக்திவேலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண் 69, பாரதி பார்க் 4வது வீதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர், வீட்டுக் குப்பைகளை அகற்றும் போது எதிர்பாராத விதமாக 3 பவுன் மதிப்புள்ள தங்கச் சங்கிலியையும் குப்பையுடன் சேர்த்து தவறுதலாக வீசி உள்ளனர்.
அந்த பகுதியில் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த மாநகராட்சி தூய்மைப் பணியாளர் சக்திவேல், சேகரிக்கப்பட்ட குப்பைகளை பரிசோதித்தபோது அதற்குள் புதைந்து கிடந்த தங்கச் சங்கிலியை கண்டுபிடித்தார்.
அதை தன்வசம் வைத்துக் கொள்ளாமல், உடனடியாக அதன் உரிமையாளரைத் தொடர்புகொண்டு, நேர்மையாக நகையை திருப்பி ஒப்படைத்தார்.
இதனால் நெகிழ்ந்த உரிமையாளர்கள், சக்திவேலுக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், பணியாளர் சக்திவேலின் நேர்மையை பாராட்டி, அதிகாரிகள் மூலம் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
பொருளாதார நெருக்கடிகள் நிறைந்த காலகட்டத்திலும், பிறர் பொருளுக்கு ஆசைப்படாமல் நேர்மைக்கு எடுத்துக்காட்டாக செயல்பட்ட சக்திவேலின் செயல் சமூக வலைதளங்களிலும் பாராட்டுகளை குவித்து வருகிறது.



