கோவை: பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் பணிக்கான பாலக்கால் பூஜை இன்று நடைபெற்றது. அமைச்சர் சம்பத்குமார் திருப்பணியை தொடங்கி வைத்தார்.
நொய்யல் ஆற்றங்கரையில் அமைந்துள்ள பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தமிழகத்தின் முக்கிய ஆன்மிக தலங்களில் ஒன்றாகும்.
இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி நடைபெறும் தேரோட்டம் மிகவும் பிரசித்தி பெற்றது.
பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்த பெரிய தேரின் மரக்கட்டைகள் மற்றும் உள்கட்டமைப்பின் உறுதித்தன்மை குறைந்தது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் பாரம்பரிய சிறப்பை கருத்தில் கொண்டு புதிய திருத்தேர் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்காக இந்து சமய அறநிலையத்துறை மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் ரூ.1 கோடியே 40 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, புதிய பிரம்மாண்ட திருத்தேர் அமைக்கும் பணிகள் திட்டமிடப்பட்டுள்ளன.
இதையடுத்து, கோவில் வளாகத்தில் இன்று காலை நடைபெற்ற பாலக்கால் பூஜையில் அமைச்சர் சம்பத்குமார் கலந்து கொண்டு, புதிய தேருக்கான மரக்காலில் புனித நீர் ஊற்றி பணிகளை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் நல்லறம் அறக்கட்டளையின் நிறுவனர் எஸ்.பி. அன்பரசன், இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் விமலா, மண்டல உதவி ஆணையர் உஷா நந்தினி, பேரூர் கோவில் உதவி ஆணையர் சத்யவதி, திருத்தேர் ஸ்தபதிகள், வடிவமைப்பாளர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
புதிய திருத்தேர் பணிகள் இன்று முதல் தீவிரமாக நடைபெறவுள்ள நிலையில், அடுத்த ஆண்டு பங்குனி உத்திரத் தேரோட்டம் புதிய கம்பீரமான தேரில் நடைபெறும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.



