கோவை: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஸ்போர்ட்ஸ் சென்டர்கள் உருவாக்கப்படும் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
கோவையில் பல்வேறு ஆய்வுகளையும் ஆலோசனைக் கூட்டங்களையும் மேற்கொள்ள வருகை புரிந்த தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா காந்திபுரம் பகுதியில் கட்டப்பட்டு வரும் பெரியார் அறிவுலகத்தை ஆய்வு செய்தார்.
பெரியார் அறிவுலகத்தில் அனைத்தையும் பார்வையிட்டார் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் பவன் குமார் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் அனைத்தையும் விவரித்தனர். மேலும் கட்டுமான பணிகளையும் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சென்னைக்கு அடுத்தபடியாக கோவை மாவட்டம் தமிழகத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பதாக தெரிவித்தார். சரியான நெடுஞ்சாலைகள் இல்லை என்றால் மக்களுடைய பயணமும் தொழில்துறையும் சரியாக இருக்காது என்று தெரிவித்தார்.
விளையாட்டு துறை சார்ந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது குறித்து பேசிய அவர் விளையாட்டுத்துறையை கல்வித் துறைக்கு சமமாக உயர்த்த வேண்டும் என்று உத்தரவுகளை முதல்வர் பிறப்பித்துள்ளதாக தெரிவித்தார். தமிழகத்தில் போதை பழக்கவழக்கங்கள் இளைஞர்கள் மத்தியில் அதிகமாக இருப்பதாகவும் இளைஞர்கள் மத்தியில் Drugs Culture அதிகமானதால் பெண்களுடைய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்கள் ஒவ்வொரு நாளும் உருவாகி வருவதாக தெரிவித்தார். இதனால்தான் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்கு உள்ளாகி இருப்பதற்கு முக்கிய காரணமாக அமைவதாகவும் கூறினார். இவற்றை சரி செய்வதற்கு விளையாட்டு துறையை மேம்படுத்த கவனம் செலுத்துவதற்கு முதல்வர் அறிவுறுத்தி கூறினார். எனவே தமிழகத்தில் எங்கெல்லாம் மைதானங்கள் உள்ளதோ பயன்படுத்த முடியாத மைதானங்கள் உள்ளதோ அவற்றையெல்லாம் கணக்கெடுத்து சீர் செய்ய வேண்டும் என்று முதல்வர் கூறி இருப்பதாக சுட்டி காட்டினார்.
கோவை நேரு ஸ்டேடியத்தில் ரிப்பேர் பணிகளுக்காக பல கோடி ரூபாய் ஒவ்வொரு ஆண்டும் செலவழிக்கப்பட்டு வருவதாகவும் ஆனால் அதனுடைய கட்டமைப்பு வலுவிழந்து இருப்பதாக குறிப்பிட்ட அவர் அது முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று சென்னையில் உள்ள ஸ்டேடியம் போன்று உலக தரம் வாய்ந்த ஸ்டேடியம் ஆக மாற்றுவதற்கு ஆயுத மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் முதல்வரின் கவனத்திற்கு இது குறித்து கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டார்.
சென்னை கோவை திருநெல்வேலி திருச்சி நாகப்பட்டினம் போன்ற மாவட்டங்களில் உலக தரத்திலான ஸ்போர்ட்ஸ் சென்டர் உருவாக்க வேண்டும் என்றும் கிராமப்புறத்தில் இருப்பவர்கள் ஏழ்மையில் இருக்கக்கூடியவர்கள் விளையாட வேண்டும் என்று நினைக்கும்பொழுது அவர்களுக்கு சர்வதேச தரத்திலான மைதானங்களை உருவாக்க வேண்டும் என்று ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார். இவையெல்லாம் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு கூடிய விரைவில் முதல்வர் புதிய Sports Policy யை அறிவிப்பார் என்று தெரிவித்தார்.
நெடுஞ்சாலை துறை குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு பற்றி பேசிய அவர் தற்பொழுது வரை சாலைகள் அமைப்பதை மட்டுமே கவனம் செலுத்தி வேலை செய்து வந்ததாக தெரிவித்தார். இந்தியாவிலேயே அதிகப்படியான சாலை விபத்துக்கள் தமிழ்நாட்டில் தான் நடப்பதாக ஆய்வுகள் கூறுவதாகவும் ஒரு ஆண்டுக்கு சுமார் 18000 பேர் சாலை விபத்துகளில் உயிர் இழக்கிறார்கள் இது கொரோனா உயிரிழப்பை விட அதிகம் என்று தெரிவித்தார். கடந்த கால அரசுகள் சாலை மேம்பாட்டிற்காக செலவுகளை செய்திருக்கும் ஆனால் பாதுகாப்பிற்கு எந்த ஒரு செலவுகளையும் செய்தது கிடையாது என்று குறிப்பிட்ட அவர் சாலைகளுக்கு எந்த அளவிற்கு பட்ஜெட் ஒதுக்கி செலவு செய்கிறோமோ அதே அளவு பாதுகாப்பிற்கும் நிதி ஒதுக்குவது குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவித்தார். விபத்தில் ஒரு உயிர் போனாலும் அது தமிழகத்திற்கான மிகப்பெரிய இழப்பு என்று கூறினார்.
கேரளா அரசாங்கம் அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் இருக்கிறது அதனால் இங்கு உள்ளவர்கள் கேரளாவிற்குள் நுழையும் பொழுது அனைத்து போக்குவரத்து விதிகளையும் பின்பற்றுகிறார்கள் ஆனால் தமிழகத்தில் பின்பற்றுவது இல்லை என்று கூறினார். எனவே போக்குவரத்து விதியை மீறுபவர்களுக்கு கடுமையான சட்டங்களையும் மக்களுக்கான விழிப்புணர்வுகளையும் அபராதம் விதிக்கும் நடைமுறைகளையும் கேரளா அரசு போல் செயல்படுத்துவதற்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
கூடிய விரைவில் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வுகளின் முடிவுகளை அமைச்சரிடம் ஒப்படைக்க இருப்பதாகவும் அதன் பின் அவருடைய ஒப்புதலுடன் வரக்கூடிய பட்ஜெட்டில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.மேலும் ஜி டி நாயுடு மேம்பாலத்தில் கூடுதலாக 5 கிலோமீட்டர் மேம்பாலம் கட்டுவதற்கு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். மேலும் சென்னை முதல் கன்னியாகுமரி வரை நெடுஞ்சாலைத்துறை சார்பில் விபத்திற்கான மருத்துவமனைகள் கட்ட வேண்டும் என்றும் கூறினார்.
கடந்த காலங்களில் ஊழல்களால் பல்வேறு துறைகள் பாதிக்கப்பட்டதாகவும் அதில் நெடுஞ்சாலை துறையும் ஒன்று என்று சுட்டிக்காட்டிய அவர் முன்பெல்லாம் கான்ட்ராக்ட் எடுப்பவர்கள் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை முதலமைச்சர் அமைச்சர்கள் ஆகியோருக்கு கொடுக்க வேண்டிய அழுத்தம் இருந்ததாகவும் ஆனால் இந்த ஆட்சியில் அந்த அழுத்தங்கள் கிடையாது என்று தெரிவித்தார். மேலும் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். ஊழல்களை ஒழிக்கும் பொழுதும் வைப்பு நிதி அந்தந்த துறைகளில் இருக்கும் பொழுதும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்க முடியும் என்று கூறினார்.
பொதுப்பணித்துறை ஆய்வு குறித்து பேசிய அவர், கோவையில் பெரியார் நூலகம் ப்ராஜெக்ட் மூன்று மாதத்தில் முடிக்கப்படும் என்றும் இந்த கட்டிடத்தில் என்னென்ன குறைகள் உள்ளது என்று இன்ஜினியர்கள் கூறியதாகவும் அதனை உடனடியாக சரி செய்வதற்கு அறிவுறுத்தி இருப்பதாக தெரிவித்தார். பொதுப்பணி துறையும் லாபம் பார்க்க வேண்டும் என்றும் அப்பொழுதுதான் இந்த துறையும் வளர்ச்சி அடையும் என்று சுட்டிக்காட்டிய அவர் தனியார் நிறுவனங்கள் எப்படி லாப நோக்கத்துடன் இயங்குகிறது அதன்படி எந்த துறையும் இயங்க வேண்டும் இங்கும் லஞ்சம் என்பதை ஒழித்து இருக்கிறோம் என்று தெரிவித்தார். இனி வரக்கூடிய டெண்டரில் குறிப்பிட்ட காலங்களில் குறிப்பிட்ட திட்டங்களை தரமாக செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.
பொதுப்பணி துறையிலும் நெடுஞ்சாலை துறையிலும் ரீப்பேர் பேச் வொர்க் என்ற பணிகளிலேயே தேவையில்லாமல் பணத்தை செலவழித்து வருவதாகவும் அப்படி இருக்கும் பொழுது ஊழல் இல்லாமல் தரமான ஒரு திட்டத்தை நாம் மேற்கொள்ளும் பொழுது குறைந்தது 40, 50 வருடங்கள் அந்தத் திட்டங்கள் நிலைத்திருக்கும் என்று தெரிவித்தார். குறைந்த இடத்தில் தரமான அதிக பேர் பயன்படக்கூடிய கட்டிடங்களை கட்ட வேண்டும் என்றும் குறிப்பிட்டார். தனியார் நிறுவனங்கள் எப்படி G+ என்ற முறையில் கட்டிடங்களை கட்டுகிறதோ அதே போன்று அரசு துறைகளும் அதனை செயல்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டார். அரசுத் துறையில் குறைந்தது G+15 என்ற முறையில் கட்டிடங்கள் அமைய வேண்டும் என்றும் தெரிவித்தார். பொதுப்பணித்துறையில் புதிய கட்டமைப்பை உருவாக்குவதற்காகவே ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.மேலும் தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளும் மோசமான நிலையில் இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்திருப்பதாகவும் எனவே அதற்கு மாற்று நடவடிக்கைகளை எடுப்பதற்கும் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
கோவை கிரிக்கெட் ஸ்டேடியம் குறித்தான கேள்விக்கு கிரிக்கெட் அசோசியேஷன் நிர்வாகிகள் அடுத்த ஆய்வில் தங்களுடன் கலந்து கொள்ள இருப்பதாக கூறியிருக்கிறார்கள் என்றும் எனவே அடுத்த முறை வரும் போது அது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
பழைய டெண்டர்களில் ஊழல்கள் ஏதேனும் நடைபெற்றுள்ளதா என்ற கேள்விக்கு அதற்கான ஆடிட்டிங் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் அதிக பட்ஜெட் போட்டு டெண்டர்கள் விடப்பட்டிருப்பதாகவும் டிசம்பருக்கு பிறகு தேர்தலுக்கு முன்பு நடந்த டென்டர்களில் அதிக மதிப்பீடு போடப்பட்டிருப்பதாக தெரிவித்த அவர் கூடிய விரைவில் டென்டர்கள் நியாயமாக நடைபெற்று அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் டெண்டர் எடுத்தவர்களுக்கு அரசியல் ரீதியாகவோ கட்சி ரீதியாகவோ அமைச்சர்கள் மூலமாகவோ எந்த ஒரு இடையூறுகளும் இருக்காது என்றும் கூறினார். கோவையை சேர்ந்த அமைச்சர்கள் இந்த ஆய்வில் பங்கேற்காதது தொடர்பான கேள்விக்கு இது துறை சார்ந்த ஆய்வு தான் என்றும் காலையிலேயே இரண்டு அமைச்சர்களும் தன்னை சந்தித்து கோவைக்கு தேவையானவை குறித்து மனுவை அளித்துள்ளனர் என்று தெரிவித்தார்.
மேற்குப் புறவழிச் சாலை பணிகள் தொடர்பான கேள்விக்கு, கோவையில் சுமார் எட்டுத்திட்டங்கள் பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் ஆய்வு அறிக்கை முடிந்தவுடன் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கோவைக்கு அதிக கவனத்தை செலுத்த வேண்டும் என்று முதல்வரும் கூறி இருப்பதாக தெரிவித்தார். நீலாம்பூர் மேம்பாலம் கட்டுமான பணிக்கு ஏற்படும் இடையூறுகள் குறித்தான கேள்விக்கு அனைத்தும் தற்பொழுது சரி செய்யப்பட்டு விட்டதாகவும் இன்னும் இரண்டு மாதங்களில் அந்தத் திட்ட பணிகள் துவங்கி விடும் என்று கூறினார். இன்னும் இரண்டு நாட்களில் ஒன்றிய நெடுஞ்சாலை துறை அமைச்சரை சந்திக்க இருப்பதாக தெரிவித்தார்.
தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை தலைவர்கள் யார் என்ற கேள்விக்கு அரசியல் சார்ந்து கேள்விகளை தவிர்க்குமாறும் இது அரசு துறை சார்ந்த ஆய்வு என்று பதிலளித்தார்.
அமைச்சர் பேஸ்கட்பால் பெடரேஷன் ஆகவும் இருக்கலாம் அவர் இருக்கக் கூடாது என்று எந்த ஒரு விதிகளும் இல்லை என்றும் அதிமுகவினர் தெரிவித்து வரும் கருத்துக்களுக்கு விளக்கம் அளித்தார். அதிமுகவினர்களுக்கு விளையாட்டு தெரியாது அரசியலும் தெரியாது என்று விமர்சித்தார்.
பெரியார் அறிவுலகத்தில் சில துறைகள் இருப்பதாக தெரிவித்தது தொடர்பான கேள்விக்கு அனைத்தையும் விமர்சனம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை பெரியார் அறிவுலகம் நல்ல ஒரு திட்டம் பெரியாரின் கொள்கைகள் அறிவியல் பூர்வமாக மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான் எண்ணம் கட்டுமானத்தில் தான் ஒரு சில குறைகள் உள்ளது கூடிய விரைவில் அது சரி செய்யப்பட்டு மக்கள் பார்வைக்கு திறக்கப்படும் என்று தெரிவித்தார். கோவை மெட்ரோ தொடர்பான கேள்விக்கு கூடிய விரைவில் ஆய்வு அறிக்கை தயார் செய்யப்பட்டு அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார். தமிழக வெற்றிக் கழக அரசு முழு வீச்சில் செயல்பட்டு வருவதாகவும் அதனால் தான் ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.
முதல்வர் வருகை குறித்தான கேள்விக்கு விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.



