கோவை கொலை வழக்கில் புதிய திருப்பம்..! நேபாள அரசுக்கு கடிதம்

கோவை: கோவையில் மருத்துவரின் 82 வயது தாயாரை கொலை செய்து நகை, பணம் கொள்ளையடித்த வழக்கில் தலைமறைவாக உள்ள நேபாள தம்பதியினரை பிடிக்க, மத்திய வெளியுறவுத்துறை மூலம் நேபாள அரசுக்கு காவல்துறை கடிதம் அனுப்பியுள்ளது.

கோவை நஞ்சுண்டாபுரத்தைச் சேர்ந்த மருத்துவர் ராம்குமாரின் 82 வயதான தாயார் கஸ்தூரி, வீட்டில் தனியாக வசித்து வந்தார். அவரை கவனித்துக் கொள்வதற்காக நேபாளத்தைச் சேர்ந்த சுர்ஜா (42) என்பவர் பணியமர்த்தப்பட்டிருந்தார்.

வீட்டில் அதிகளவில் நகை மற்றும் பணம் இருப்பதை அறிந்த சுர்ஜா, அந்த தகவலை நேபாளத்தில் இருந்த தனது கணவர் ராஜீவிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து கடந்த மார்ச் 6ஆம் தேதி, ராஜீவ், சுர்ஜா மற்றும் அவர்களது உறவினர்களான ராகேஷ் சவுத், திலீப் சாகி, தாமுர் புக்தா ஆகியோர் சேர்ந்து கஸ்தூரியை கொலை செய்துவிட்டு, வீட்டிலிருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்றதாக போலீசார் தெரிவித்தனர்.

Advertisement

இந்த சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதன்பேரில் ராகேஷ் சவுத், திலீப் சாகி மற்றும் தாமுர் புக்தா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

ஆனால் ராஜீவ் – சுர்ஜா தம்பதியினர் தலைமறைவாக இருந்து வருகின்றனர்.

தலைமறைவான தம்பதியினரை கைது செய்ய தனிப்படை போலீசார் பெங்களூரு மற்றும் மும்பை உள்ளிட்ட நகரங்களில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

எனினும் அவர்கள் குறித்து எந்த தகவலும் கிடைக்காததால், நேபாளத்திற்கு தப்பிச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து நாடு முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், தம்பதியினரின் உறவினர்களின் செல்போன் எண்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

அவர்கள் உறவினர்களை தொடர்பு கொள்கிறார்களா என்பதையும் போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இது குறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், “தலைமறைவாக உள்ள தம்பதியினர் நேபாளத்தில் பதுங்கியிருக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

எனவே அவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு விவரங்கள் மற்றும் புகைப்படங்களுடன் மத்திய வெளியுறவுத்துறை மூலம் நேபாள அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் நேபாள காவல்துறையுடனும் தொடர்பில் இருந்து வருகிறோம். தம்பதியினர் நேபாளத்தில் இருந்தால் விரைவில் அவர்களை கண்டுபிடிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது” என்று தெரிவித்தனர்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

Video

எம்.எல்.ஏ கேட்டவுடன் ஓடிவந்து திருக்குறள் ஒப்புவித்த அரசு பள்ளி மாணவன்…

கோவை சூலூர் அரசுப் பள்ளியில் எம்.எல்.ஏ கேட்ட கேள்விக்கு மாணவன் உடனடியாக திருக்குறள் ஒப்புவித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பள்ளி வரவேற்பு நிகழ்வில் எம்.எல்.ஏ என்.எம். சுகுமார் கலந்து கொண்டார்.