கோவை: அண்ணாமலை புதிய கட்சி அறிவிப்பை தொடர்ந்து, கோவை மாவட்ட பாஜக நிர்வாகிகள் பலரும் பாஜகவில் இருந்து விலகி வருகின்றனர்.
தமிழக அரசியலில் கால் ஊன்ற வேண்டும் என்ற நோக்கில் பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதற்காக தமிழக பாஜகவின் தலைவராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை நியமிக்கப்பட்டார்.
உறுப்பினர் சேர்க்கை, ஆர்ப்பாட்டங்கள், மாநாடு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அண்ணாமலை முன்னெடுத்தார். இதன் விளைவாக கடந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பாஜகவிற்கு நான்கு எம்.எல்.ஏ. சீட்டுகள் கிடைத்தன. அவரது தலைமையில் தமிழகத்தில் பாஜக பல மடங்கு வளர்ச்சி அடைந்தது.
சமீபத்தில் அண்ணாமலை தன்னைத் தானே சாட்டையால் அடித்துக் கொண்டதும், திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றாமல் செருப்பு அணியமாட்டேன் என்று கூறியதும் அரசியல் ரீதியான விமர்சனங்களையும் ஏற்படுத்தியது.
இதனிடையே அதிமுக கூட்டணி, அண்ணாமலை மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையேயான கருத்து வேறுபாடுகள் காரணமாக பாஜக தலைவர் பொறுப்பிலிருந்து அண்ணாமலை விடுவிக்கப்பட்டார். அவருக்கு பதிலாக நயினார் நாகேந்திரன் பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார்.

அப்போது முதலே பாஜக தொண்டர்கள் கடும் அதிருப்தியை தெரிவித்து வந்தனர். அண்ணாமலை தலைமையிலான பாஜகவில் பணியாற்றவே விருப்பம் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இதனிடையே 2026 சட்டமன்றத் தேர்தலில் கோவையில் உள்ள முக்கிய நிர்வாகிகளுக்கு சீட் வழங்கப்படாததால், பாஜக தலைமை மீது தொண்டர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். குறிப்பாக கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதியில் பிரபலமான பாஜக நிர்வாகி வசந்தராஜனுக்கு இந்த தேர்தலில் சீட் வழங்கப்படவில்லை.
இதனால் வேட்பாளர் அறிவிப்பு நாளிலேயே கிணத்துக்கடவில் பல்வேறு பிரச்சனைகள் எழுந்தன. பாஜக தொண்டர்கள் கொதிப்படைந்து மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
Also Read: கோவையில் அப்பாவி டிரைவர்… போதை பெண்ணின் அடாவடி… வீடியோ காட்சிகள்…!
இந்த நிலையில், இன்று சமூக வலைதளங்களில் உரையாற்றிய அண்ணாமலை, தான் ஒரு புதிய அரசியல் இயக்கத்தை உருவாக்கியதாகவும், அடுத்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு களம் காண உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் தமிழக நலனை முன்னிறுத்தி செயல்படுமாறு பாஜகவிற்கு பலமுறை அறிவுறுத்தியும், கட்சி தலைமை அதனை ஏற்கவில்லை என்றும் கூறினார். இதனைத் தொடர்ந்து, கடந்த டிசம்பர் மாதமே தனது நிலைப்பாட்டை கட்சித் தலைமையிடம் தெரிவித்ததாகவும் அவர் அந்த வீடியோவில் குறிப்பிட்டிருந்தார்.
புதிய அமைப்பை (We The Leader) தொடங்கியுள்ள அண்ணாமலை, அதில் விருப்பமுள்ளவர்கள் இணையுமாறு அழைப்பு விடுத்துள்ளார். லட்சக்கணக்கான மக்கள் அவரது இயக்கத்தில் இணைந்து வருகின்றனர்.
இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் உள்ள பாஜக நிர்வாகிகள் பலரும் தங்களது கட்சி பொறுப்புகளை ராஜினாமா செய்து, அண்ணாமலையுடன் கைகோர்க்க தயாராகி வருகின்றனர்.

கோவை மாவட்ட பாஜகவின் முன்னாள் மாவட்ட தலைவராக இருந்த பாலாஜி உத்தமராமசாமி, தெற்கு மாவட்ட தலைவராக இருந்த வசந்தராஜன், மாநில இளைஞரணி செயற்குழு உறுப்பினர் மோகன் பாலசுப்ரமணியம், கோவை மாவட்ட விளையாட்டு பிரிவு துணைத் தலைவர் மனோஜ் ஆகியோர் தற்போது பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.
VIDEO
ஏற்கனவே அதலபாதாளத்தில் இருந்த பாஜக உறுப்பினர்கள் எண்ணிக்கை, அண்ணாமலையின் இந்த அறிவிப்பு காரணமாக மேலும் சரிவை சந்தித்து வருகிறது. இது பாஜக நிர்வாகிகளுக்கு பேரிடியாக அமைந்துள்ளது.
அண்ணாமலை கட்சி தொடங்க உள்ளதாக அறிவித்துள்ள நிலையில், அவர் தமிழக அரசியலில் காலூன்ற முடியுமா? முடியுமென்றால் அவர் என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கருத்துகளை கீழே கமெண்ட்டில் தெரிவிக்கலாம்.


