கோவை: இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் மே 29 முதல் 31 வரை நடைபெற்ற சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில், கோவையைச் சேர்ந்த சிறுவன் மித்ரன் எஸ்.கே. பதக்கங்கள் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
அண்டர்-6 வயது பிரிவில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்தியா, சிங்கப்பூர், மலேஷியா, இந்தோனேசியா, மியான்மர் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த இளம் வீரர்கள் பங்கேற்றனர்.
இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்திய மித்ரன் சிறப்பாக விளையாடி இரண்டு வெள்ளிப் பதக்கங்களும் ஒரு வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினார்.
1000 மீட்டர் மற்றும் 500 மீட்டர் ஸ்கேட்டிங் போட்டிகளில் வெள்ளிப் பதக்கங்களையும், 1800 மீட்டர் ரிலே போட்டியில் வெண்கலப் பதக்கத்தையும் அவர் வென்றார். இளம் வயதிலேயே சர்வதேச அளவில் சாதனை படைத்துள்ள மித்ரனின் வெற்றி பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது.
மித்ரன், கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ஸ்ரீ நேரு வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளியில் முதலாம் வகுப்பு படித்து வருகிறார். இவரது பெற்றோர் வடவள்ளியைச் சேர்ந்த சுந்தர்ராஜன் மற்றும் கிருத்திகா ஆவர்.
சர்வதேச போட்டியில் பதக்கங்கள் வென்று கோவைக்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ள மித்ரனுக்கு பள்ளி நிர்வாகம், விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
கோவை சிறுவன் மித்ரன் சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் 3 பதக்கங்கள் வென்று அசத்தல்
கோவை சிறுவன் மித்ரன் சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் 3 பதக்கங்கள் வென்று அசத்தல்


