கோவை: ஆதவ் அர்ஜுனாவை பதவியில் இருந்து நீக்க வேண்டுமென கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
கோவை குனியமுத்தூர் பகுதியில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
இந்த செய்தியாளர் சந்திப்பு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குடும்பத்தினரின் பெயர்கள் போதை பொருட்கள் கடத்தல் வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளதாக தெரிவித்து அது தொடர்பாக நடைபெற்றது.
இந்த செய்தியாளர் சந்திப்பில் பேட்டியளித்த அவர் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் துணைவியார், மாமியார் குறித்து 2 நாட்களாக எழுந்திருக்க கூடிய போதை பொருட்கள் கடத்தல் கும்பல் உடனான தொடர்புகள் அதிர்ச்சியாக உள்ளது, 27.05.2026ம் தேதி அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை அதிர்ச்சி அளிக்கும் தகவலைப் கொண்டுள்ளது என்றார்.
ஜான்பிரிட்டோ என்பவர் பல நாட்களில் போதை பொருளை கடத்தி வந்துள்ளார், அதன் மூலம் பெறப்பட்ட தொகையை உற்றார் உறவினருக்கு கை மாற்றி உள்ளார். ஜான் பிரிட்டோ, ஜான் கென்னடி என்பவர் லால்குடி MLA லீமா ரோஸ் மார்ட்டின் மற்றும் தமிழ்நாடு அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் துணைவியார் டெய்ஸி ஆகியோர் பண பரிமாற்றம் சட்ட விரோத நடவடிக்கைகளுக்காக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, எனவே அவர்கள் வெளிநாடு தப்பி செல்லாமல் இருக்க நீதிமன்றம் உத்தரவு அளித்தது அதே சமயம் 2024ல் எர்ணாகுளம் நீதிமன்றத்தில் விதிவிலக்கு பெற்றுள்ளார்கள் என்றார்.
ஜான் பிரிட்டோ, ஜான் கென்னடி, லீமா ரோஸ் ஆகியோர் கோவை சேர்ந்தவர்கள் ஆதவ் அர்ஜுனா துணைவியார் சென்னை விலாசத்தில் இருக்கிறார்கள் என கூறிய அவர் எனவே இவர்கள் அனைவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது நீதிமன்ற ஆவணங்கள் மூலம் தெரியவருகிறது என்றார்.
முதல்வர் விஜய் ஊழலற்ற ஆட்சியை கொடுக்க வேண்டும், மது போதை இல்லாத ஆட்சி என்பதை தான் அவர்களது முக்கிய வாக்குறுதியாக கொடுத்துள்ளார் என்ற அவர் இந்நிலையில் தற்போதைய குற்றச்சாட்டை லேசான குற்றச்சாட்டாக எடுத்து கொள்ள கூடாது இது சர்வதேச விவகாரமாக பார்க்க வேண்டும் என்றார்.
தீய ஆட்சி சென்று தூய ஆட்சி வர வேண்டும் ஆனால் தூய ஆட்சி என்று சொல்ல கூடிய இந்த ஆட்சியில் ஆதவ் அர்ஜுனா முக்கிய முகமாக இருக்கிறார் எனவே ஆதவ் அர்ஜுனாவை தவெக வில் வைத்திருப்பது முறையா? அமைச்சரவையில் இருப்பது முறையா? என கேள்வி எழுப்பினார். மேலும் இதில் இருந்து அவர்கள் விடுபடும் வரை ஆதவ் அர்ஜுனா வை விஜய் நீக்க வேண்டும் என்றும் இந்த விஷயத்தில் விஜய் மெளனம் சாதிக்க கூடாது அது அவருக்கு ஆபத்தாக மாறலாம் என்றார்.
கரூர் விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட நிதி உதவி பணம் யாருடையது என கண்டுபிடிக்கப்பட வேண்டும்,அது ஆதவ் அர்ஜுனா கொடுத்த பணம் என்றால் அவருக்கு அந்த பணம் எங்கிருந்து வந்தது? என கேள்வி எழுப்பினார். இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் மத்திய அரசும் இதில் எங்களுக்கு தொடர்பு இல்லை என இருந்து விடாமல் முழுமையாக விசாரிக்க வேண்டும் ஆளுநர் இதில் தலையிட வேண்டும் சிபிஐ விசாரணையும் வேண்டும் என்றார்.
தமிழ்நாட்டில் தூய ஆட்சி நடக்க வேண்டும் என்றால் ஆதவ் அர்ஜுனாவை கட்சியில் இருந்தும் அமைச்சரைவில் இருந்தும் நீக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும் இதில் மதுரோவிற்கும் இதற்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா என ஆராய வேண்டும் என்றார்.
லீமா ரோஸுக்கு 5000 கோடி எங்கிருந்து வந்தது? என கேள்வி எழுப்பிய அவர், லீமா ரோஸையும் அதிமுக நீக்க வேண்டும் என்றார். ஆதவ் அர்ஜுனா குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் ஒவ்வொரு கட்சியில் பொறுப்பு வகிக்கிறார்கள் என்ற அவர் உள்துறை துரிதமாக இந்த விவகாரத்தில் செயல்பட வேண்டும் என்றார்.
தவெக ஒரு மாத கால ஆட்சி தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்க மறுத்த அவர் அதற்குள்ள செல்ல வேண்டாம் என தெரிவித்தார். மேலும் இது போன்று குடும்பத்தினர் மீது குற்றச்சாட்டு வரும் போது ஆதவ் அர்ஜுனா அவராகவே முன்வந்து பதவி விலக வேண்டும் என்றும் இது குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார்.


