சென்னை: TNPSC குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 26 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான இந்தத் தேர்வுக்கு ஜூன் 30-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். முதல் நிலைத் தேர்வு செப்டம்பர் 6-ம் தேதி நடைபெறுகிறது.
தமிழக அரசின் உயர்நிலை நிர்வாகப் பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 (Group-I Services) தேர்வுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வெளியிட்டுள்ளது. அதன்படி, குரூப்-1 முதல் நிலை (Preliminary) தேர்வு வரும் செப்டம்பர் 6-ம் தேதி நடைபெற உள்ளது.
இந்த ஆட்சேர்ப்பின் மூலம் துணை ஆட்சியர் (Deputy Collector), வணிக வரித்துறை உதவி ஆணையர், கூட்டுறவுத் துறை துணைப் பதிவாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட மொத்தம் 26 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் 12 துணை ஆட்சியர் பணியிடங்களும், 2 வணிக வரித்துறை உதவி ஆணையர் பணியிடங்களும் அடங்கும்.
குரூப்-1 தேர்வுக்கு தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஜூன் 30-ம் தேதி வரை இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என TNPSC தெரிவித்துள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களின் கல்வித் தகுதி, வயது வரம்பு, இடஒதுக்கீட்டு விவரங்கள் உள்ளிட்ட அனைத்து தகுதி நிபந்தனைகளையும் கவனமாக பரிசீலித்து விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
குரூப்-1 தேர்வு தமிழக அரசின் மிகவும் மதிப்புமிக்க போட்டித் தேர்வுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்கள் முதன்மைத் தேர்வு (Main Examination) மற்றும் நேர்முகத் தேர்வு (Interview) ஆகிய கட்டங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
தேர்வுக்கு விண்ணப்பிக்க: https://www.tnpsc.gov.in/



