கோவை: தவெகவில் நடப்பது குதிரை பேரம் என்றால் திமுகவில் நடந்தது பெருச்சாளி பேரமா என வைகோ வினவியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், பத்திரிக்கையாளர்களுடன் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற விவாதம் குறித்து விவரித்தார். மேலும் பத்திரிக்கையாளர்கள் மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பவன் பத்திரிக்கையாளர்களை மதிக்க கூடியவன் நான் என்றும் தெரிவித்தார்.
அதிமுகவும் திமுகவும் TVKவிற்கு எதிராக கைகோர்த்து இருப்பது தொடர்பான கேள்விக்கு, அதிமுகவிற்கு திமுக ஆதரவு அளித்து எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்குவது என்ற நிலைப்பாடு எடுக்கப்பட்டது உண்மை என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் கூறியுள்ளார் அவ்வாறு எடுத்திருந்தால் அதைவிட பெரிய அரசியல் மோசடி இருக்காது என்று தெரிவித்தார். தற்பொழுது ஆளுநரை பார்ப்பதற்கு அதிமுகவினர் திமுகவினர் செல்கிறார்கள், ஆளுநர் அரசாங்கம் செய்ய வேண்டிய வேலைகளை தான் எடுத்துக் கொண்டு எதுவாக இருந்தாலும் தன்னிடம் கூறலாம் என்று கூறுகிறார் என்ற வைகோ அதற்கு ஆளுநருக்கு என்ன அதிகாரம் உள்ளது? என்று கேள்வி எழுப்பினார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள் தான் இதனை செய்ய முடியுமே தவிர ஆளுநரே இதனை செய்வேன் என்றால் இது என்ன கவர்னர் ஆட்சியா? என்று வினவினார்.
ஆளுநரிடம் திமுக சார்பில் கொடுக்கப்பட்ட ஒரு புகாரில் 356வது பிரிவை பயன்படுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் அந்த பிரிவு என்னவென்றால் மாநில ஆட்சிகளை டிஸ்மிஸ் செய்வதற்கான பிரிவு என்று குறிப்பிட்ட அவர் ஏன் அதனை பயன்படுத்த வேண்டும் என்று திமுக நினைக்கிறது? அப்படி என்றால் கவர்னர் ஆட்சியை கொண்டு வரவேண்டும் என்று நினைக்கிறதா என்று கேள்வி எழுப்பினார்.
குதிரை பேரம் நடக்கிறது என்று திமுக கூறினார் கம்பம் சட்டமன்ற தொகுதியில் மதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினரை கட்சியிலிருந்து ராஜினாமா செய்ய வைத்து மீண்டும் அவரை திமுக சார்பில் போட்டியிட வைத்து ஜெயிக்க வைத்தது பெருச்சாளி பேரமா என்று கேள்வி எழுப்பினார். மேலும் இது போன்ற குதிரை பேரத்தை தொடங்கி வைத்ததே திமுக தான் என்று விமர்சித்தார். இதுபோன்றுதான் அனிதா ராதாகிருஷ்ணனையும் அதிமுகவிலிருந்து ராஜினாமா செய்ய வைத்து திமுக வில் ஜெயிக்க வைத்தார் என்றார்.
திமுகவுடன் இணைந்து அதிமுக ஆட்சி அமைப்பது என்று எடுக்கப்பட்ட நிலைப்பாடு அதிமுகவில் இருந்த சிவி சண்முகம் உட்பட பலருக்கும் பிடிக்கவில்லை என்றும் அதனை 30க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்த்தார்கள் பிறகுதான் அதுபோன்று எதுவும் நடக்கவில்லை என்று பூசி மொழுகி பேச ஆரம்பித்தார்கள் என்று விமர்சித்தார். ஆனால் அவ்வாறு ஒரு பேச்சு வார்த்தை நடந்தது என்று சிபிஎம் பேபி, சண்முகம், காதர் மொய்தீன் கூறியுள்ளனர் என்றார்.
இந்த ஆட்சி என்ன செய்து விட்டது என்று திமுகவினர் கேட்கிறார்கள் ஜனநாயகத்தை நாசப்படுத்துகின்ற ஊழல் கமிஷன் கடந்த ஆட்சியில் நடைபெற்றதாகவும் எதற்கெடுத்தாலும் லஞ்சம் கேட்கபட்டதாக கட்சிக்கு அப்பாற்பட்ட நிறுவனதாரர்கள் தொழில் செய்பவர்களே கூறினார்கள் ஆனால் தற்பொழுது இந்த ஆட்சியில் கமிஷன் கேட்கப்படுவது இல்லை என்று அவர்களே கூறுகிறார்கள் கமிஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை என்கிறார்கள் கமிஷன் கட்டிங் கரப்ஷன் மீட்கப்பட்டுள்ளது இதுதான் இந்த அரசின் இமாலய சாதனை என்று பெருமை தெரிவித்தார்.
ஆட்சியை இழந்து விட்டு கொஞ்ச நாள் கூட உங்களால் நிம்மதியாக இருக்க முடியாதா என்று திமுகவை பார்த்து கேட்ட அவர் தமிழக வெற்றி கழகத்தை ஆதரித்து பேசுவதால் மிகவும் கோபமுடன் என்னுடன் நடந்து கொள்வதாக கூறினார். எங்களை நடத்திய விதமும் தேர்தலுக்கான இடங்கள் ஒதுக்கப்பட்ட விதமும் மற்ற கட்சிகளுக்கு சமமாக எங்களையும் நடத்துங்கள் என்று கேட்டும் நான்கு சீட்டுகள் தான் கொடுப்போம் வேற பேச்சுக்கே இடமில்லை என்று முகத்தில் அடித்தார் போன்று சொன்னார்கள் என்று தெரிவித்தார்.
கூட்டணி தர்மத்திற்கு கட்டுப்பட்டு திமுகவை ஆதரித்து நான் பிரச்சாரம் மேற்கொண்டேன் என்றும் எங்களை நடத்திய விதத்தில் எங்களுடைய தொண்டர்களும் தோழர்களும் நூற்றுக்கு நூறு சதவிகிதம் இந்தக் கூட்டணியில் தொடரக்கூடாது என்றுதான் கூறினார்கள் திமுகவுடன் இருந்து விலகிக் கொள்கிறோம் என்று அறிவித்தவுடன் எங்களது தொண்டர்கள் அனைவரும் ஆர்ப்பரித்து மகிழ்ந்ததாகவும் குறிப்பிட்டார். மேலும் அதிமுகவிற்கு திமுக ஆதரவு கொடுக்கிறது என்றால் ஏதோ ஒன்று இருக்கிறது என்று Something Wrong என்றார்.
சோபா வாங்கியவுடன் அனைவரும் சென்று விட்டார்கள் என்ற உதயநிதி கூறியது தொடர்பான கேள்விக்கு அந்த நண்பருக்கு எல்லாம் பதில் சொல்ல விரும்பவில்லை என்று தெரிவித்தார்.
திமுகவில் ஊழல் இருக்கிறது என்று நீங்கள் கூறிய நிலையில் திமுகவிற்காக எதற்காக பிரச்சாரத்திற்கு சென்றீர்கள் என்ற கேள்விக்கு கூட்டணியில் இருந்ததால் பிரச்சாரத்திற்குச் சென்றேன் கூட்டணி தர்மத்தை கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக பொறுமை காத்தேன் அமைதி காத்தேன் அது தவறு இல்லையே என்றார். ஒரு இடம் கூட தேர்தலில் எங்களுக்கு தரவில்லை என்றாலும் திமுகவுடன் இருப்பேன் என்று ஏற்கனவே கூறி இருந்தது தொடர்பான கேள்விக்கு ஆமாம் ஒரு காலத்தில் நான் அவ்வாறு சொன்னேன் அப்படியாவது நல்ல முறையில் எங்களை நடத்துவார்கள் நியாயமாக நடந்து கொள்வார்கள் என்று எதிர்பார்த்தேன் ஆனால் அவர்கள் அதனை செய்யவில்லை எங்களை நியாயமாக நடத்தவில்லை அதனால் கட்சி தொண்டர்கள் அனைவரும் புண்பட்டு போனார்கள் எனவேதான் இந்த முடிவிற்கு வந்தோம் என்று தெரிவித்தார்.
என்னிடம் கேட்டது போல் மற்ற தலைவர்களிடம் நிரூபர்கள் கேள்வி கேட்டால் அவர்கள் அந்த இடத்திலிருந்து வெளியில் வந்திருக்க முடியாது என்றும் நான் அப்படிப்பட்டவன் இல்லை என்றும் தெரிவித்தார்.
மேகதாது விவகாரம் தொடர்பான கேள்விக்கு மேகதாது அணையை எதிர்த்து முதல் முதலில் ஆயிரக்கணக்கானோரை திரட்டி போராட்டம் நடத்தியவன் நான் என்றும் மேகதாது அணை குறித்து தூண்டி விடுவதே மத்திய மோடி சர்க்கார் தான் என்றார். மேலும் தான் காவிரி பாதுகாப்பு அமைப்பு என்ற ஒரு அமைப்பை துவக்கி போராடியவன் நான் என்றும் குறிப்பிட்ட அவர் கொள்ளிடம் மேட்டூருக்கு கூட தண்ணீர் வராது என்று மக்களிடத்தில் கொண்டு சென்றவன் நான் என்று தெரிவித்தார்.
இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் மக்கள் கொந்தளித்ததை போல மத்திய சர்க்கார்க்கு ஒரு பயம் வர வேண்டும் மொத்த தமிழகமும் கொந்தளித்து எழ வேண்டும் அதற்காக தற்போது அன்புமணி ராமதாஸ் முன்னெடுத்துள்ள முன்னெடுப்பை வரவேற்கிறேன் என்றார். மேகதாது அணை கட்டப்படாமல் இருப்பதற்கு நம்முடைய முயற்சி வெற்றி பெற்றால் தான் எதிர்கால தமிழ்நாடு பஞ்சபிரதேசமாகவும் பாலைவனமாகவும் மாறாமல் இருக்கும் என்று தெரிவித்தார்.
மற்ற கட்சிகள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தெரிவிக்க சட்டமன்ற உறுப்பினர்களுடன் செல்லும் பொழுது மதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினர்கள் வரவில்லையே என்ற கேள்விக்கு இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் காணாமல் போய்விட்டார்கள் நான் என்ன செய்ய முடியும் என்று பதிலளித்தார்.
முதல்வர் விஜய் நடத்துகின்ற இந்த அரசுக்கு எதிர் தரப்பில் இருந்து வரக்கூடிய கணைகளை தடுக்கின்ற கவசமாகவும் கேடயமாகவும் மதிமுக இருக்கும் என்றார்.


