கோவை: எம்ஜிஆருக்குப் பிறகு யாரும் சினிமாவில் இருந்து வந்து அரசியலில் ஜெயிக்க முடியாது என்ற பேச்சுக்களை தவிடு பொடியாக்கிய முதல்வர் விஜய்யின் அரசியல் வளர்ச்சி, தமிழ் சினிமா திரையுலகில் பலருக்கும் முதல்வர் ஆசையை வளர்த்து விட்டுள்ளது. அதுபற்றி சிறிய தொகுப்பை தற்போது காணலாம்.
திரும்பிப் பார்க்க வைத்த வெற்றி
இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் எந்தக் கட்சியும் கண்டிராத வரலாற்று வெற்றியைப் பெற்று ஆட்சியைப் பிடித்தவர் தவெக தலைவர் விஜய். சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்ததால் யாரும் எம்ஜிஆர் ஆக முடியாது என்று திமுக மற்றும் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் கடுமையாக விமர்சித்து வந்தனர். கருத்துக்கணிப்புகள் கூட விஜய்க்கு எதிராகவும், திமுகவுக்கு ஆதரவாகவும் தான் இருந்தன. இப்படிப்பட்ட சூழலில், சுமார் 60, 70 ஆண்டுகள் ஆட்சி செய்து வந்த அதிமுக, திமுகவக்கே விபூதி அடித்து ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளார். இது தமிழகம் மட்டுமல்லாது, ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தது.

விஜய்யின் வெற்றிக்கு திமுக, அதிமுக ஆகிய திராவிட கட்சிகள் மீதான அதிருப்தியும், விரக்தியும் ஒரு காரணமாக இருந்தாலும், Gen Z இளைஞர்களும், இளம் பெண்களும் அதிகளவு ஓட்டுப்போடச் செய்த விஜய்யின் ஈர்ப்பும் தான். குறிப்பாக, பெண் வாக்காளர்களின் ஓட்டுக்களும் விஜய்க்கு வலுசேர்த்தன. இதன் விளைவாக திமுக மற்றும் அதிமுக ஆட்டம் கண்டுள்ளது.
விஜய்யின் கட்சியில் வெற்றி பெற்ற 100க்கு 99 சதவீதம் எம்எல்ஏக்கள், முதல்முறையாக சட்டசபைக்கு தேர்வானவர்களாவர். அந்தக் கட்சியில் அனுபவமிக்க அமைச்சராக இருப்பவர் செங்கோட்டையன் மட்டுமே.
விஜய் ஆட்சிக்கு வந்த பிறகு இளைஞர்களும், இளம் பெண்களும் அரசியலில் ஆர்வம் காட்டத் துவங்கி விட்டனர். அதுமட்டுமில்லாமல், பெரும்பாலான திரை பிரபலங்கள் விஜய்க்கான ஆதரவை வெளிப்படையாக தெரிவித்தனர். விஜய் நடிகர் என்பதால், அவர் முதல்வரானால் திரையுலகத்திற்கான ஆதரவு அதிகரிக்கும் என்ற நம்பிக்கையே இதற்கு காரணமாகும். இதற்கு முன்பு, திமுக, அதிமுக மட்டுமே தேர்தலில் போட்டியாளர்களாக இருந்த நிலையில், எந்த நடிகர்களும் தங்களின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியது கிடையாது.
வரிசை கட்டிய நடிகர்கள்
நடிகர் விஜய்யின் இந்த அரசியல் வெற்றியைத் தொடர்ந்து, பல்வேறு நடிகர்களுக்கும் அரசியல் ஆசை வந்து விட்டது. இதில், முதல் இடத்தில் இருப்பவர் நடிகர் தனுஷ். அண்மையில் திருவள்ளூரில் நடந்த தனது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அவர் பேசிய பேச்சுக்கள் மூலம், அவரது அரசியல் ஆசை வெளிப்பட்டது.
‘ஏன் நாங்க எல்லாம் போயஸ் கார்டனில் வீடு வாங்கக் கூடாதா? என்று அவர் பேசிய பேச்சு சமூகவலைதளங்களில் மிகவும் பிரபலமான ஒன்றாகும். அந்த வரிசையில் தற்போது பேசிய பேச்சுக்களும் வரிசை கட்டி வரத் தொடங்கி விட்டன.

நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அவர் பேசுகையில், “இத்தனை பேர் இங்கு ஒன்றாக கூடியிருக்கிறீர்கள். இந்த ஒற்றுமைக்கும் ஒரு சக்தி உள்ளது. அந்த சக்திக்கு ஒரு நோக்கம் இருக்க வேண்டும். என்னுடைய ரசிகர்கள் மக்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து வழங்க வேண்டும்,” என்று அரசியல் என்ட்ரிக்கு அடித்தளம் இடுவது போன்று பட்டாசாக அவர் வெடித்து தள்ளினார்.
ஏனெனில், விஜய்யும் ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றி, பின்னர் அரசியல் கட்சியைத் தொடங்கினார். தற்போது தனுஷூம் அதே பாணியை கையில் எடுத்து இருக்கிறார் என்ற பேச்சுக்கள் அடிபடுகின்றன.
இவை அனைத்திற்கும் மேலாக, முதல்வர் விஜய்யின் ஜோதிடரான ரிக்கி ராதன் பண்டிட், தனுஷின் ஜாதகத்தையும், அரசியல் எதிர்காலம் குறித்தும் கணித்து வெளியிட்ட தகவல்கள், தனுஷூக்கு அரசியல் ஆசையை மேலும் நங்கூரமிடச் செய்து விட்டது.
சாதகமான ஜோதிடம்
தனியார் நிகழ்ச்சி ஒன்றில் ரிக்கி ராதன் பேசியதாவது;நடிகர் தனுஷின் ஜாதகத்தில் அரசியலில் மிகப்பெரிய உச்சத்தை எட்டுவதற்கான யோகம் இருக்கிறது. தீவிர அரசியலில் இறங்குவது அவரது தனிப்பட்ட விருப்பம். ஒருவேளை நடிகர் தனுஷ் அரசியலுக்குள் நுழைந்தால், எதிர்க்கட்சியான 2வது இடத்தை ரொம்ப எளிதாக பிடித்து விடுவார். முன்பு அதிமுக – திமுக என்றிருந்த அரசியல் களம், எதிர்காலத்தில் விஜய் – தனுஷ் என்று நேரடியாக மாறுவதற்கான வாய்ப்புகளே அதிகம் உள்ளன.
விஜய்யின் அரசியல் வளர்ச்சி, தனுஷின் அரசியல் என்ட்ரி ஆகியவற்றால், அதிமுக மற்றும் திமுக இடையே புதிய கூட்டணி உருவாகவும் வாய்ப்பிருக்கிறது, எனக் கூறினார். தனுஷின் அரசியல் குறித்த அவரது ஜாதகக் கணிப்பு தற்போது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பான விவாதத்தை உருவாக்கியுள்ளது.
முதல்வர் கனவு
இது ஒருபுறம், தற்போது அரசியல் ஆசை இருக்கும் நடிகர் யார் என்றால், அது ராகவா லாரன்ஸ் தான். நீண்ட ஆண்டுகளாகவே மாற்றுத்திறனாளிகளுக்கும், பொதுமக்களுக்கும் பல்வேறு உதவிகளை செய்து, மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளார். முதல்வர் விஜய் வெற்றி பெற்று ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடுவார் என்ற பேச்சுக்கள் எழுந்தன. உடனே பரபரப்பு கிளம்பும் வகையில் ஒரு கருத்தை சொல்லிவிட்டு, பிறகு போட்டியில்லை என்று மீண்டும் விளக்கம் அளித்து, அந்தப் பரபரப்பு தீயை அணைத்து விட்டார். இவருக்கும் முதல்வர் ஆக வேண்டும் என்ற கனவு இருக்கிறதாம்.

அண்ணாச்சியின் ஆசை
இந்த இரு முன்னணி நடிகர்களையும் தாண்டி, தற்போது ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து பிரபலமான லெஜன்ட் சரவணன் அண்ணாச்சிக்கும் அரசியல் ஆசை துளிர் விட்டுள்ளதாம். சினிமாவில் இருந்து வந்த விஜய் வெற்றி பெறும் போது, மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நமக்கு வெற்றி கிடைக்காதா? என்ற கேள்வி அவரிடையே எழுந்துள்ளதாம். 2031 சட்டசபை தேர்தலில் சுமார் ரூ.500 கோடி வரையில் செலவு செய்ய தயாராக இருப்பதாகவும், இதற்காக அரசியல் ஆலோசகர்களிடம் ஆலோசனை கேட்டு வருவதாகவும் அரசியல் விமர்சகர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

2031ல் உறுதி
நடிகர்களின் அரசியல் விருப்பம் குறித்த அரசியல் விமர்சகர்கள் கூறியதாவது; மேலும், தனுஷூக்கு அரசியல் ஆசை என்பது தற்போது உதயமானது அல்ல. அதேபோலத் தான் பிற நடிகர்களுக்கும். ஏனெனில் முன்பு ஜெயலலிதா, கருணாநிதி என்ற அரசியல் ஆளுமைகள் இருந்த காரணத்தினால், அரசியல் என்ட்ரி என்பது நடிகர்களுக்கு சரிபட்டு வராத ஒன்றாகவே இருந்து வந்தது. ஆனால், அவர்களின் மறைவால் தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடம் மற்றும் நடிகர் விஜய்யின் அரசியல் வெற்றி போன்றவை தனுஷ், லாரன்ஸ் போன்றவர்களுக்கு பெரும் தன்னம்பிக்கை ஏற்படுத்தி இருக்கலாம். இதன் காரணமாகவே, சட்டசபை தேர்தல் முடிந்து இரு மாதங்களிலேயே தங்களின் அரசியல் நிலைப்பாட்டை மறைமுகமாக வெளிப்படுத்தி வருகின்றனர். விஜய் 2024ல் கட்சி ஆரம்பித்திருந்தாலும், 2026 சட்டசபை தேர்தல் வரை, தன்னுடைய நேரத்திற்காக காத்திருந்தார். தற்போது, தனுஷூம் இப்போதில் இருந்து மெல்ல மெல்ல அரசியலுக்குள் நுழைந்து, 2031ல் களமாட திட்டமிட்டிருக்கலாம், என்கின்றனர்.
நடிகர் தனுஷ் சினிமா படங்களில் அரசியல் வசனம் பேசினாலே, அது வரவேற்பை பெறுமா? என்ற சந்தேகம் எழும் நிலையில், ஒருவேளை அரசியல் என்ட்ரி கொடுத்து விட்டால், நிஜத்தில் அவர் திராவிட கட்சிகள் மற்றும் முதல்வர் விஜய்யை எதிர்த்து எப்படி அரசியல் செய்யப்போகிறார் என்பதை சற்றும் யோசிக்க முடியாத காட்சியாகவே உள்ளது.




