கோவை: மாணவர்கள் இடதுசாரி கட்சிகள் CJP அமைப்புடன் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்ற அறிக்கையை கண்டித்து கோவையில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
பள்ளி கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் இடதுசாரி கட்சியினர் ஆகியோர் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நடத்தும் போராட்டங்களில் பங்கேற்பதை தடுக்கும் வகையில் இன்று காலை தமிழக அரசு சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அந்த அறிக்கைக்கு பெரும் கண்டனங்கள் எழுந்த நிலையில் உடனடியாக அவ்வறிவிப்பு திரும்ப பெறப்பட்டது.
இந்நிலையில் அந்த அறிக்கை வெளியிடப்பட்டதை கண்டித்தும் அறிக்கையை அனுப்பிய தலைமைச் செயலாளர் கல்லூரி கல்வி இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கோவையில் இந்திய மாணவர் மற்றும் வாலிபர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள கோவை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு SFI மாநில செயலாளர் சம்சீர் அகமது தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் சுமார் 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தமிழக அரசை கண்டித்தும் அந்த அறிக்கை வெளியிட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பினர்.
குறிப்பாக தலைமை செயலாளர் கல்லூரி கல்வி இயக்குனர் இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இது குறித்து பேட்டி அளித்த மாநில செயலாளர் சம்சீர் அகமது அறிக்கையில் குறிப்பிடப்பட்ட மாணவர் சங்கங்கள் இடதுசாரி அமைப்புகள் தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ளதா? அரசியலமைப்பு சட்டத்திலேயே பேச்சுரிமை சங்கம் சேரும் உரிமை போராடும் உரிமைகள் உள்ள நிலையில் அதனை மீறி அறிக்கை விடும் அதிகாரம் தலைமை செயலாளருக்கு யார் கொடுத்தது என்று கேள்வி எழுப்பினார்.
இது குறித்து தலைமைச் செயலாளர், தலைமை கல்லூரி கல்வி இயக்குனர் ஆகியோர் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
மேலும் தமிழகத்தின் அரசு அதிகாரிகள் நேரடியாக ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறார்களா என்ற கேள்வியும் எழுவதாக தெரிவித்தார்.





