கோவை: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வேளாண் அறிவியலாளர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில் வேளாண் இணை பேராசிரியர்களுக்கு, “திறன் மேம்பாட்டுப் பயிற்சி” 19.8.2026 முதல் 21.8.2026 வரை அளிக்கப்படுகிறது.
இப்பயிற்சியைத் துவக்கி வைத்து பேசிய தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பதிவாளர் மற்றும் செயல் துணைவேந்தர் முனைவர் சுப்ரமணியன், வகுப்பறையில் ஆசிரியர்கள் வழங்கும் அறிவு, மாணவர்களின் செயல்திறனாகவும், சமூகப் பயன்பாட்டுக்கான செயல்பாடாகவும் மாற்றப்பட வேண்டும். வகுப்பறையில் உருவாக்கப்படும் சிந்தனைகள் சமூக முன்னேற்றத்திற்கும், செயல்பாட்டிற்கும் பயனுள்ளதாக அமையும் போதுதான், மாணவர்களிடமும் சமூகத்திடமும் தன்னம்பிக்கையை உருவாக்க முடியும் என்றார்.
அறிவு சார்ந்த கல்வியிலிருந்து ஞானம் சார்ந்த கல்வியை நோக்கி நகர்வதற்கு, ஆசிரியர்கள் தங்களது கற்றல் முறைகளையும், அணுகு முறைகளையும் தொடர்ந்து மேம்படுத்திக் கொள்வது அவசியம் என வலியுறுத்தினார்.
பல்வேறு கோணங்களில் புதிய நுண்ணறிவைத் தேடுவதும் ஆழமான சிந்தனையுடன் கற்றுக்கொள்வதும் எதிர்காலக் கல்வியின் தரத்தை உயர்த்தும் என்றார். கல்வி, ஆராய்ச்சி பணி மட்டுமல்லாது சிறந்த நிர்வாகத்திறனும் ஒருவருக்கு அவசியமாகிறது. எனவே அதைக் கருத்தில் கொண்டு இப்பயிற்சியின் ஒருபகுதியாக நிர்வாகத் திறன் மேம்பாடு பற்றியும், வழங்கப்பட உள்ளது என்றார்
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் முதுநிலை கல்வி முதன்மையர் (SPGS) முனைவர் பாபு சிறப்புரையில், கற்றல் என்பது வகுப்பறை அறிவுடன் நின்றுவிடுவதல்ல. கற்றதைச் சிந்தனையாகவும் செயலாகவும் மாற்றுவதே அதன் நோக்கம் என்றார். ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் வளர்ச்சி.
நமது சிந்தனைத் திறனைச் சுருக்காமல், அதை மேலும் விரிவுபடுத்தும் கருவியாக அமைய வேண்டும். தொழில்நுட்பத்தைச் சார்ந்திருப்பதைத் தவிர்த்து, சுயசிந்தனைக்கும் படைப்பாற்றலுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றார்.
இதனைக் கருத்தில் கொண்டு, நவீன கற்பித்தல் அணுகுமுறைகள். மேம்பட்ட ஆராய்ச்சித் திறன்கள். டிஜிட்டல் கற்பித்தல், இணையப் பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் அறிவியல் தகவல் தொடர்புத் திறன்களை பேராசிரியர்களுக்கு வழங்கும் வகையில் இப்பயிற்சித் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
உயர்தர ஆராய்ச்சி முன்மொழிவுகளை உருவாக்குதல், இந்தியக் கல்வி அமைப்பைப் புரிந்துகொள்ளுதல், கல்விசார் மேன்மைக்கான தர உறுதிப்பாடு. இணையப் பாதுகாப்பு மற்றும் தரவு தனியுரிமை. Q1 தர அறிவியல் ஆய்விதழ்களில் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடுவதற்கான உத்திகள், செயற்கை நுண்ணறிவு சார்ந்த கற்பித்தல் முறைகள். கல்விசார் செயலிகள், விளையாட்டு அடிப்படையிலான கற்றல் மற்றும் வேளாண் விரிவாக்கத்தில் நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் ஆகிய தலைப்புகளில் இப்பயிற்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.





