கோவை: கோவை மாநகராட்சிப் பகுதிகளில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தெருநாய்களின் தொல்லையால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அச்சத்தில் உள்ள நிலையில், சைக்கிளில் சென்ற நபரை தெருநாய்கள் கூட்டமாக துரத்திச் செல்லும் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
கோவை சுந்தராபுரம், மதுக்கரை சாலை, அஷ்டலட்சுமி நகர் பகுதியில் நேற்று மாலை ஒருவர் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு கூட்டமாக நின்றிருந்த தெருநாய்கள் திடீரென ஆக்ரோஷமாகக் குரைத்தவாறு அவரை நோக்கிப் பாய்ந்து, கடிக்க துரத்திச் சென்றன.
தெருநாய்களிடம் சிக்காமல் இருக்க அந்த நபர் சைக்கிளை வேகமாக மிதித்துத் தப்பிச் செல்லும் நெஞ்சைப் பதறவைக்கும் காட்சிகள், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் (CCTV) பதிவாகியுள்ளன. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதனிடையே, இதே பகுதியில் தெருநாய்கள் துரத்தியதால் 8 வயது சிறுமி ஒருவர் கூச்சலிட்டபடி இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்ற மற்றொரு அதிர்ச்சி சம்பவமும் நடந்துள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர் நூர் அகமது கூறுகையில்,
“அஷ்டலட்சுமி நகரில் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு வெளியே ஓடி வந்தேன். அப்போது 8 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவரைத் தெருநாய்கள் கூட்டமாகத் துரத்தியுள்ளன. அந்தப் பயத்தில் அச்சிறுமி இருசக்கர வாகனத்தில் அதிவேகமாகத் தப்பிச் சென்றுள்ளார். நல்லவேளையாக எதிரே வேறு எந்த வாகனங்களும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு, அச்சிறுமி உயிர் தப்பினார்” எனக் கூறினார்.
கோவை மாநகரில் தெருநாய்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியரிடம் சமூக ஆர்வலர் நூர் அகமது நேரில் மனு அளித்துள்ளார்.
VIDEO
அதில், “பொதுமக்களுக்கும் குழந்தைகளுக்கும் பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் தெருநாய்களைக் கட்டுப்படுத்த மாநகராட்சி உடனடியாகக் களமிறங்க வேண்டும். மேலும், பொதுமக்கள் வளர்ப்பு நாய்களை வெளியே அழைத்து வரும்போது அவற்றுக்கு கட்டாயம் ‘வாய்க்கவசம்’ (Muzzle) அணிய வேண்டும். இதை மீறினால் கடும் அபராதம் விதிக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
Also Read: ஸ்டவ் பற்றவைக்கும் பெண்களே கவனம் கோவையில் பரிதாபம்!
மாநகராட்சி நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு தெருநாய்களைப் பிடித்து, அவற்றின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தத் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சுந்தராபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முதன்மையான எதிர்பார்ப்பாக உள்ளது.





