கோவை : மேட்டுப்பாளையம்–ஊட்டி சாலையை ஆடி அசைந்தபடி கடந்து சென்ற ‘பாகுபலி’ காட்டு யானையை பொதுமக்கள் செல்போனில் வீடியோ பதிவு செய்து ரசித்தனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் தனித்து சுற்றித்திரியும் ‘பாகுபலி’ என்ற காட்டு யானை, வழக்கம்போல் இரவு நேரத்தில் மேட்டுப்பாளையம்–ஊட்டி சாலையை கடந்து சென்றது. இதனை அப்பகுதி பொதுமக்கள் செல்போனில் வீடியோ பதிவு செய்து ரசித்தனர்.
யானைக் கூட்டங்களுடன் சேராமல் தனித்தே நடமாடி வரும் ‘பாகுபலி’ யானை, நெல்லிமலை வனப்பகுதியில் முகாமிட்டு வருகிறது. இரவு நேரங்களில் உணவு மற்றும் நீரைத் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியேறும் இந்த யானை, சமயபுரம் சாலை, கல்லாறு வனப்பகுதியை ஒட்டிய தோட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித்திரிந்துவிட்டு, மீண்டும் ஓடந்துறை காப்புக்காடு மற்றும் நெல்லிமலை வனப்பகுதிக்குள் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த நிலையில், யானையின் நடமாட்டத்தை கண்காணிக்க வனத்துறையினர் பல்வேறு குழுக்களாக பிரிந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக யானை கடந்து செல்லும் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.
அப்போது, ஓடந்துறை காப்புக்காடு பகுதியில் இருந்து வெளியேறிய ‘பாகுபலி’ யானை, ஆடி அசைந்தபடி மேட்டுப்பாளையம்–ஊட்டி சாலையை அமைதியாகக் கடந்து, சாலையோர கட்டிடங்கள் மற்றும் கல்லாறு வனப்பகுதியை ஒட்டியுள்ள தோட்டங்கள் வழியாக சமயபுரம் சாலையை கடந்தது. பின்னர் நெல்லிமலை வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது.
சாலையை கம்பீரமாகக் கடந்து சென்ற ‘பாகுபலி’ யானையை பார்த்த பொதுமக்கள் பலரும் தங்களது செல்போன்களில் வீடியோ பதிவு செய்து ரசித்தனர். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.


