கோவை : கோவையில் வீட்டை காலி செய்யுமாறு கூறிய வீட்டு உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக வாடகைதாரரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை விநாயகபுரம் கம்பன் வீதியைச் சேர்ந்தவர் பிரிசில்லா (43). இவரது கணவர் செல்வின் சாமுவேல். இவர்களது வீட்டின் ஒரு பகுதியில் திருநெல்வேலியைச் சேர்ந்த நலின் மனோ (28) என்பவர் தனது மனைவி ரமாவுடன் வாடகைக்கு வசித்து வந்தார்.
இந்நிலையில், நலின் மனோ சட்டவிரோதமாக குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்து வருவதாக கிடைத்த தகவலின் பேரில் அன்னூர் மற்றும் சரவணம்பட்டி போலீசார் பிரிசில்லாவின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.
Also Read: கோவையில் தவெக தொண்டர் அட்டூழியம்- அப்பாவி மீது தாக்குதல் பரபரப்பு வீடியோ
இதனால் அதிருப்தியடைந்த பிரிசில்லா, தனது வீட்டை காலி செய்யுமாறு நலின் மனோவிடம் தெரிவித்தார். அதற்கு அவர் ஒரு வாரத்திற்குள் வீட்டை காலி செய்வதாக கூறியிருந்தார்.
இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிகாலை நேரத்தில், வீட்டின் பூட்டப்பட்ட காம்பவுண்ட் சுவரை தாண்டி நலின் மனோ வெளியே சென்ற காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது.
இதுகுறித்து பிரிசில்லா, நலின் மனோவின் மனைவி ரமாவிடம் விளக்கம் கேட்டபோது, அங்கு வந்த நலின் மனோ ஆத்திரமடைந்து, பிரிசில்லாவை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், “இனி எங்களைப் பற்றி கேள்வி கேட்டால் கொலை செய்து விடுவேன்” என மிரட்டியதாக கூறப்படுகிறது.
Also Read: கலைத்துறையில் ஆர்வமுள்ள குழந்தைகளுக்கு இலவச பயிற்சி- கோவை ஆட்சியரின் அறிவிப்பு…
இதையடுத்து பிரிசில்லா, சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், நலின் மனோ மிரட்டல் விடுத்தது உறுதியானதைத் தொடர்ந்து, அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


