கோவை: கோவை மாநகராட்சி குடிநீர் திட்டங்களுக்கு நீர் வழங்கும் பவானி தடுப்பணையில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகளை மாநகராட்சி கமிஷனர் நேரில் ஆய்வு செய்தார்.
சிறுவாணி, பில்லூர், வடவள்ளி, ஆழியாறு உள்ளிட்ட கூட்டு குடிநீர் திட்டங்கள் மூலம் கோவை மாநகர பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பில்லூர்-3 திட்ட பராமரிப்பு பணிகள் காரணமாக குடிநீர் விநியோகம் 10ம் தேதி வரை நிறுத்தப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம், சமயபுரம் பகுதியில் உள்ள பவானி தடுப்பணைகளில் தமிழ்நாடு பசுமை எரிசக்தி நிறுவனத்தின் சார்பில் கதவணை மற்றும் இயந்திரங்களுக்கு வருடாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த பணிகளை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பணிகளை விரைவாக முடித்து பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் தாமதமின்றி வழங்க வேண்டும் என அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். உடன் தலைமை பொறியாளர் விஜயகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் இருந்தனர்.
பராமரிப்பு பணிகள் விரைவில் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


