கோவை:கோவை சரவணம்பட்டியில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது அதிவேகமாக பைக் சாகசத்தில் ஈடுபட்ட 4 இளைஞர்களுக்கு ரூ.19 ஆயிரம் அபராதம் விதித்து போலீசார் எச்சரித்தனர்.
கோவை மாநகரில் விபத்துகள் மற்றும் குற்றச்சம்பவங்களை தடுக்க போலீசார் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், சரவணம்பட்டி பகுதியில் இரவு நேரத்தில் 2 மோட்டார் சைக்கிள்களில் சென்ற 4 இளைஞர்கள் சாலையில் ஆபத்தான முறையில் ஆட்டம் போட்டபடி அதிவேகமாக சென்றனர்.
இந்த காட்சி வீடியோவாக சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது. இதனை கண்ட பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இதையடுத்து, வீடியோவில் பதிவான மோட்டார் சைக்கிள்களின் பதிவு எண்களை வைத்து கோவை மாநகர போக்குவரத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து சம்பந்தப்பட்ட 4 பேரையும் போலீசார் கண்டுபிடித்து விசாரணை நடத்தினர்.
அதில், பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது அவர்கள் மோட்டார் சைக்கிள்களை அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் இயக்கியதும், அவர்களில் ஒருவருக்கு ஓட்டுநர் உரிமம் இல்லாததும் தெரியவந்தது.
இதையடுத்து, 2 மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியதற்காக ரூ.5 ஆயிரம் மற்றும் ஆபத்தான முறையில் அதிவேகமாக வாகனம் ஓட்டியதற்காக ரூ.12 ஆயிரம் என மொத்தம் ரூ.19 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
பின்னர், 4 பேரையும் போலீசார் கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தனர். சாலைகளில் இதுபோன்ற ஆபத்தான சாகசங்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.



