கோவை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கோவை மாவட்டம் 97.09 சதவீத தேர்ச்சி பெற்று மாநில அளவில் 7வது இடத்தை பிடித்துள்ளது. மேலும், கோவை மாநகராட்சி பள்ளிகள் 94.38 சதவீத தேர்ச்சியை பதிவு செய்து சாதனை படைத்துள்ளன.
தமிழ்நாடு முழுவதும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில், கோவை மாவட்டத்தில் தேர்வு எழுதிய 37,844 மாணவ, மாணவிகளில் 36,742 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் மாவட்டத்தின் தேர்ச்சி விகிதம் 97.09 சதவீதமாக உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டு கோவை மாவட்டத்தில் 96.47 சதவீதம் தேர்ச்சி பதிவாகியிருந்த நிலையில், இந்த ஆண்டு அது 97.09 சதவீதமாக உயர்ந்துள்ளதாக கோவை முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி தெரிவித்துள்ளார்.
மாணவர்களில் 18,506 பேர் தேர்வு எழுதிய நிலையில் 17,760 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகளில் 19,338 பேர் தேர்வு எழுதி, 18,952 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதேபோல், கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளில் மொத்தம் 1,851 மாணவ, மாணவிகள் 10ம் வகுப்பு தேர்வு எழுதினர். இதில் 722 மாணவர்கள் மற்றும் 1,025 மாணவிகள் என மொத்தம் 1,747 பேர் தேர்ச்சி பெற்று 94.38 சதவீத தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது.
மேலும், மணியக்காரன்பாளையம், ஒக்கிலியர் காலனி, கோவை வடக்கு, சித்தாபுதூர், புலியகுளம் மற்றும் ராமசாமி நகர் உள்ளிட்ட 6 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன.
அறிவியல் பாடத்தில் 6 பேரும், சமூக அறிவியல் பாடத்தில் 3 பேரும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.



