கோவை: கோவையில் தபால், பாஸ்போர்ட், கலெக்டர் அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம், விமான நிலையம், பாஸ்போர்ட் அலுவலகம், கோர்ட், ஆர்டிஓ., தபால் நிலையங்கள், தனியார் கல்லூரி உட்பட மாநகரின் முக்கிய பகுதிகளுக்கு அடிக்கடி மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வருகின்றனர்.
வெடிகுண்டு மிரட்டல்கள் வருவதும், போலீசார் சோதனை செய்வதும், தொடர் கதையாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் வழக்கம் போல நேற்று இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அந்த இமெயிலில் தலைமை தபால் நிலையம், டிபி ரோட்டில் உள்ள தபால் நிலையம், கோவை சித்ராவில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகம், கலெக்டர் அலுவலகம் ஆகிய இடங்களில் வெடி குண்டு வைக்கப்பட்டு உள்ளது.
சிறிது நேரத்தில் 15 சயனைடு கியாஸ் வெடி குண்டுகள் வெடித்து சிதற உள்ளது என இருந்தது. இதுகுறித்து அந்தந்த துறை அதிகாரிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார், மோப்ப நாய் உதவியுடன் அனைத்து அலுவலகங்களிலும் சோதனையில் ஈடுபட்டனர்.
அங்குள்ள அறைகள், வாகனம் நிறுத்தம் என அனைத்து இடங்களிலும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். அதில் வெடிகுண்டு மிரட்டல் வழக்கம் போல புரளி என்பது தெரியவந்தது.
கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு 31வது முறையாக வெடி குண்டு மிரட்டல் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே தொடர்ந்து வெடி குண்டு மிரட்டல் விடுத்து வரும் மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி உள்ளனர்.


