கோவை: வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற சாலை விபத்துகளில் சிக்கி வாலிபர் உட்பட 2 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை கேஎன்ஜி புதூர் பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் (80), நேற்று முன்தினம் கேஎன்ஜி புதூர் – கணுவாய் சாலையில் நடந்து சென்றபோது சாலையை கடக்க முயன்றார்.
அப்போது எதிர்பாராத விதமாக வந்த பைக் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த அவர், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
மற்றொரு சம்பவத்தில், திருநெல்வேலி மாவட்டம் ஊத்துமலை விகே புதூரைச் சேர்ந்த செல்வக்குமார் (34), கோவையில் தங்கி வேலை பார்த்து வந்தார். இவர் சுண்டக்காமுத்தூர் – குனியமுத்தூர் சாலையில் குளத்துப்பாளையம் சந்திப்பு அருகே பைக்கில் சென்றபோது, அடையாளம் தெரியாத மற்றொரு பைக் மோதியது.
விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த அவர், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த இரு விபத்துகளையும் தொடர்பாக கோவை மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், விபத்தை ஏற்படுத்தி நிற்காமல் தப்பிச் சென்ற வாகன ஓட்டியை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


