ராணிப்பேட்டை: ஆதிபராசக்தி விவசாயக் கல்லூரி மாணவிகளுக்கு அசைவ உணவு வழங்குவதில் பாகுபாடு காட்டப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் நோட்டீஸ் வழங்கி விசாரணை நடத்தி வருவதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண் துறை அமைச்சர் வினோத் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை பகுதியில் செயல்பட்டு வரும் ஆதிபராசக்தி விவசாயக் கல்லூரியில், விடுதியில் தங்கி பயிலும் மாணவர்களுக்கு வாரத்தில் இரண்டு முறை அசைவ உணவு வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.
சிக்கன் பிரியாணி மற்றும் சிக்கன் குழம்பு உள்ளிட்ட உணவுகள் மாணவர்களுக்கு வழங்கப்படும் நிலையில், அதே கல்லூரி விடுதியில் தங்கி படிக்கும் சுமார் 600 மாணவிகளுக்கு அசைவ உணவு வழங்கப்படாமல், சைவ உணவு மட்டுமே வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால், கல்லூரி நிர்வாகம் மாணவிகளுக்கு எதிராக உணவு பாகுபாடு மற்றும் பாலின பாகுபாட்டை பின்பற்றுவதாக மாணவிகள் மற்றும் கல்வியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஒரே கல்லூரியில் மாணவர்களுக்கு அசைவ உணவு வழங்கப்படும் நிலையில், மாணவிகளுக்கு மட்டும் அது மறுக்கப்படுவது ஏன் என்றும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
மேலும், விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகள் வெளியே சென்று உணவகங்களில் உணவருந்த அனுமதி இல்லை என்றும், உணவு செயலிகள் மூலம் ஆர்டர் செய்து கல்லூரி வளாகத்திற்குள் உணவு கொண்டு வரவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுபோன்ற கட்டுப்பாடுகள் காரணமாக மாணவிகள் அசைவ உணவு சாப்பிட முடியாத சூழல் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நீண்ட காலம் விடுதியில் தங்கி பயிலும் மாணவிகளுக்கு போதுமான ஊட்டச்சத்து கிடைக்க வேண்டும் என்பதால், அவர்களுக்கு விருப்பத்தின் அடிப்படையில் அசைவ உணவு உள்ளிட்ட சத்தான உணவுகளை வழங்க வேண்டும் என கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அசைவ உணவு வழங்கப்படுவது தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு கல்லூரி நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மாணவிகள் விடுதி மற்றும் உணவு கட்டணத்தை குறைக்க வேண்டும் என கேட்டதன் அடிப்படையிலேயே அசைவ உணவு வேண்டாம் என தெரிவிக்கப்பட்டதாக கல்லூரி நிர்வாகம் கூறுகிறது.
ஆனால், மாணவர்கள் மாதத்திற்கு ரூ.5,500 முதல் ரூ.6,000 வரை உணவு கட்டணம் செலுத்துவதாகவும், மாணவிகள் ரூ.5,000 முதல் ரூ.5,500 வரை செலுத்துவதாகவும் கூறப்படுகிறது.
வெறும் ரூ.500 முதல் ரூ.1,000 வரையிலான கட்டண வித்தியாசத்தை காரணமாகக் கொண்டு மாணவிகளுக்கு அசைவ உணவு மறுக்கப்படுவது நியாயமா என கல்வியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்த விவகாரத்தில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்த வேண்டும் என்றும், மகளிர் ஆணைய அதிகாரிகள் கல்லூரிக்கு நேரில் சென்று மாணவிகளின் கருத்துகளை கேட்டு விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஒரே கல்லூரியில் மாணவர்களுக்கு அசைவ உணவு வழங்கப்பட்டு, மாணவிகளுக்கு மட்டும் அது மறுக்கப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு கல்வியாளர்கள் மற்றும் மாணவிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





