கோவை: பள்ளி பேருந்துகளை கோவை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்.
கோவை பி.ஆர்.எஸ் மைதானத்தில் வட்டார போக்குவரத்து கழகத்தின் சார்பில் பள்ளி பேருந்துகளின் இயக்கத்திறன் மற்றும் வாகனங்களின் பாதுகாப்பு வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது. போக்குவரத்து துணை ஆணையர் (மாநகரம்) அசோக்குமார், வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் விஸ்வநாதன் (வடக்கு) (மத்திய (பொ)), பிரதீபா (மேற்கு), பூங்கோதை (தெற்கு) (பொ) ஓட்டுநர்கள், தீயணைப்பு துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த ஆய்வின்போது தீயணைப்புத்துறையின் மூலம் ஓட்டுநர்களுக்கு தீயை எவ்வாறு அணைப்பது என்பது குறித்த விளக்கமளிக்கப்பட்டதை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டார்.

பள்ளிக் கல்வி நிறுவனங்களின் 2026-2027 ஆம் கல்வியாண்டு தொடங்குவதால், தமிழ்நாடு மோட்டார் வாகன சிறப்பு விதிகள், 2012-ன்படி கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு வசதிகள் குறித்த ஆய்வு நடைபெற்று வருகிறது.
அதன்படி கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களான கோயம்புத்தூர் (மையம்) கோயம்புத்தூர் (தெற்கு) கோயம்புத்தூர் வடக்குகோயம்புத்தூர் (மேற்கு) மற்றும் சூலூர் பகுதி அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள 1775 பள்ளி பேருந்துகளுக்கு (Regulation and Control of School Buses) பெர்மிட் வழங்கப்பட்டு, அவற்றில் 1213 பேருந்துகள் இன்று ஆய்வுக்கு வரப்பெற்றன. எஞ்சிய 562 வாகனங்களின் சோதனையானது வரும் வாரத்திற்குள் நடைபெறும்.
மேலும், பேருந்துகளில் அவசரகால வழி, தீயணைப்பு கருவிகள் முதலுதவி பெட்டி, பேருந்து இருக்கைகள் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்டவை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வில் கலந்து கொண்ட அனைத்து பள்ளி வாகன ஓட்டுநர்களுக்கும் கண் சிகிச்சை மற்றும் உடற்பரிசோதனை முகாம் வட்டார போக்குவரத்துத்துறையின் சார்பில் நடத்தப்படவுள்ளது.
இன்று ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வாகனங்களில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அவற்றை சரிசெய்து, பள்ளிகள் திறப்பதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். பள்ளிப் பேருந்துகள் சரியான வேகத்தில் இயக்கப்பட வேண்டும் என வாகன ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும், மாநகர பகுதிகளில் குறிப்பிட்ட வேக வரம்பில் இயக்கப்படுகிறதா என்பது தொடர்ந்து போக்குவரத்துத்துறை வட்டார போக்குவரத்து துறை மற்றும் காவல்துறை மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.



