திமுகவுடன் கூட்டணி இல்லை- CPI வீரபாண்டியன் அதிரடி அறிவிப்பு…

கோவை: தி.மு.க வுடன் கூட்டணியில் இல்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் கோவையில் தெரிவித்து உள்ளார்.

கோவையில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு கூட்டத்திற்குப் பிறகு, மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர்,

நாட்டின் தற்போதைய அரசியல் சூழல், பல்வேறு முக்கிய விவகாரங்கள் மற்றும் கட்சியின் நிலைப்பாடு குறித்து விளக்க அளித்தார்.
நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவைப் பற்றிப் பேசிய வீரபாண்டியன், ஆங்கிலேயர் ஆட்சியில் பின் தங்கி இருந்த இந்தியாவை முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்றவர் நேரு என்றும், ஐந்து ஆண்டுத் திட்டங்கள் மற்றும் விண்வெளி ஆராய்ச்சித் துறையில் அவர் அடித்தளம் அமைத்து கொடுத்ததே இந்தியாவின் பிரம்மாண்ட வளர்ச்சிக்குக் காரணம் என்றும் குறிப்பிட்டார். நேருவை விட அதிக காலம் பிரதமராக இருந்த மோடியைப் பாராட்டும் தலைவர்கள், நேருவை வசைபாடுவது ஏற்புடையதல்ல என்று அவர் விமர்சித்தார்.

தமிழ்நாடு மற்றும் தேசிய அளவிலான பல்வேறு பிரச்சனைகள் குறித்துக் கருத்து தெரிவித்த அவர், நீட் மற்றும் சி.பி.எஸ்.இ முறைகேடுகளால் கல்வி அமைப்பு சீர்குலைந்து உள்ளதாகவும், இதனால் உருவாகி உள்ள மாணவர்களின் போராட்டங்களில் நியாயம் உள்ளதாகவும், பிரதமர் இந்த விவகாரத்தில் செவி சாய்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், புதிய தொழிலாளர் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும், விவசாய சங்கங்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும், விவசாயக் கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Advertisement

தமிழ்நாட்டில் ஆளுநர் உரை தமிழ் தாய் வாழ்த்துடன் தொடங்க வேண்டும் என்றும், தமிழ் மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிதியை ஒன்றிய அரசு விடுவிக்க வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், இது சலுகை அல்ல, மாநிலங்களின் உரிமை என்று குறிப்பிட்டார்.

இருமொழிக் கொள்கையில் முதல்வர் உறுதியாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டவர், கோவை மண்டலத்தில் பாதிக்கப்பட்டு உள்ள சிறு, குறு தொழில்களைப் பாதுகாக்க அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும், கிடப்பில் உள்ள மெட்ரோ ரயில் திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய வீரபாண்டியன், ஊடகங்கள் ஜனநாயகத்தின் தூண்கள் என்றும், செய்தியாளர்களைச் சிறையில் அடைப்பதோ ? அல்லது செய்தி சேனல்களை முடக்குவதோ கூடாது என்றும் குறிப்பிட்டார்.

அரசியல் கூட்டணி குறித்துப் பேசிய அவர், தற்போதைய சூழலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் மாநிலக் குழு கூடி, அப்போதைய சூழலுக்கு ஏற்ப ஜனநாயக சக்திகளுடன் இணைந்து முடிவெடுக்கப்படும் என்று கூறினார்.

தி.மு.க, அ.தி.மு.க, மற்றும் த.வெ.க (TVK) ஆகிய அனைத்தும் ஜனநாயக சக்திகளே என்று குறிப்பிட்ட அவர், வர்க்க நலன் சார்ந்தே தாங்கள் முடிவெடுப்போம் என்றார்.

த.வெ.க-வின் செயல்பாடுகளைக் கவனித்து வருவதாகவும், மக்கள் அளித்த தீர்ப்பின் அடிப்படையிலேயே அவர்களை ஆதரிப்பதாகவும் கூறிய அவர், அதே சமயம் தவறு செய்யும் எந்தவொரு கட்சியையும் கம்யூனிஸ்டுகள் விமர்சிப்பார்கள் என்றும், தாங்கள் எப்போதும் எதிர்க்கட்சியாகவே இருப்போம் என்றும் உறுதிபடத் தெரிவித்தார்.

இறுதியாக, முதல்வர் விஜய் புதியவர் என்பதால் அவர் சூழலைக் கற்றுக்கொள்வார் என்று நம்பிக்கை தெரிவித்த அவர், தங்களைச் சிலர் விமர்சிப்பதைப் பற்றிக் கவலைப்படாமல், பகைமையை வளர்க்காமல், மக்கள் நலன் சார்ந்து தங்களின் பயணம் தொடரும் என்றும் தெரிவித்த அவர் டாஸ்மாக் மதுபான நிறுவனங்கள் மூலம் கடந்த காலங்களில் பெறப்பட்ட நிதி தொடர்பாக சட்டபூர்வ நடவடிக்கை தேவை எனவும் தெரிவித்தார்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

கோவையில் பாஜகவை தாக்கிய செங்கோட்டையன்!

தமிழகத்தில் சினிமா பிம்பம் குறித்து பாஜக விமர்சனம் செய்த நிலையில், ஆந்திர துணை முதலமைச்சர் குறித்த கேள்வியை எழுப்பி அமைச்சர் செங்கோட்டையன் பதிலடி கொடுத்தார்.

Video

கோவையில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த பாம்பால் பரபரப்பு…

துடியலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த கண்ணாடி விரியன் பாம்பால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் தீயணைப்பு வீரர்கள் அதனை உயிருடன் பிடித்தனர்.