கோவை: கட்சிக்காக உழைத்தவர்களை திமுக மதிக்கவில்லை என மேட்டுப்பாளையம் டி.ஆர்.எஸ் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக வாய்ப்பு வழங்கப்படாத நிலையில் சுயேட்சையாக போட்டியிட்ட டி.ஆர்.சண்முக சுந்தரம் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், இருக்கின்ற காலத்தில் நன்கு வேலை செய்வதை விட்டுவிட்டு தற்பொழுது ஆய்வு செய்து என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை என்று திமுகவை சாடினார். தன்னைப் போல் நன்கு பணியாற்றியவர்களுக்கு வாய்ப்பு வழங்காமல் இருந்ததை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்றும் கூறினார்.
சுயேட்சையாக போட்டியிட்ட நிலையில் உடனடியாக தமிழக வெற்றி கழகத்துடன் இணையும் முடிவை எடுக்க முடியவில்லை என்று தெரிவித்தார். திமுக நல்லவர்களை கைவிட்டு விட்டது இனி அவர்கள் எந்த அளவிற்கு நல்லது செய்வார்கள் என்று சொல்ல முடியாது என்றும் தெரிவித்தார்.
திமுகவில் எனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தால் வெற்றி நிச்சயமாக இருக்கும் என்றும் கூறினார். தமிழக வெற்றி கழகத்தில் அணுகுமுறை நன்றாக இருப்பதாகவும் 10 ஆண்டுகள் திமுகவில் இருந்து வேஸ்ட் செய்து விட்டோம் என்றும் கருத்து தெரிவித்த அவர் தமிழக வெற்றி கழகம் மிகுந்த எழுச்சியுடனும் புத்துணர்ச்சியுடனும் இருப்பதாக தெரிவித்தார்.
கடந்த 10 ஆண்டுகளாக திமுகவில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் எந்த அமைச்சர்களை சந்திப்பது என்று கூட தெரியவில்லை யாரும் தங்களை மதிக்கவும் இல்லை என்று குற்றம் சாட்டிய அவர் அதற்கான பலன்களை தற்போது அனுபவிப்பார்கள் என்று தெரிவித்தார். திமுக ஆட்சியில் கட்சியின் தொண்டர்கள் கூட மக்களுக்கு நல்லது செய்ய முடியவில்லை என்றும் சாடினார்.
வருங்காலத்தில் திமுகவிற்கு பின்னடைவு தான் ஏற்படும் என்றும் பணம் காசுக்கெல்லாம் இங்கு வேலை இல்லை என்று மக்கள் நிரூபித்துள்ளார்கள் என்றும் மக்களுக்காக யார் ஆட்சி செய்கிறார்களோ அவர்கள் தான் தமிழகத்தை ஆள முடியும் என்ற முடிவை மக்கள் வழங்கி உள்ளார்கள் என்று குறிப்பிட்டார்.



