கோவை : கோவை பீளமேடு பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை விற்பனை செய்ததாக 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 3.5 கிலோ கஞ்சா, 1,708 போதை மாத்திரைகள் மற்றும் ரூ.21,270 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை பீளமேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிவில் ஏரோட்ரோம், பிருந்தாவன் காலனி பின்புறம் உள்ள திறந்தவெளிப் பகுதியில் சிலர் போதைப்பொருட்களை விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து பீளமேடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை சட்டவிரோதமாக வைத்துக்கொண்டு விற்பனை செய்து கொண்டிருந்த 7 பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.
Also Read: கங்கனா VS க்ரீத்தி சனோன் மோதல்… கவர்ச்சி ஆடை to பாரத மாதா கி ஜெய் வரை…
விசாரணையில், பிடிபட்டவர்கள் சின்னியம்பாளையத்தைச் சேர்ந்த ஜெகத் ஹரி (22), சஞ்சய் (24), பாலாஜி என்ற மாதன் பாலாஜி (20), வெள்ளலூர் ஹவுசிங் யூனிட்டைச் சேர்ந்த நாகராஜன் (24), அபுபக்கர் சித்திக் (29), செட்டிபாளையத்தைச் சேர்ந்த சூர்யா (23), பீளமேடு பகுதியைச் சேர்ந்த சவுந்தரராஜன் (23) என்பது தெரியவந்தது.
அவர்களிடமிருந்து 3.5 கிலோ கஞ்சா, 1,708 போதை மாத்திரைகள் மற்றும் போதைப்பொருள் விற்பனை மூலம் கிடைத்ததாக கூறப்படும் ரூ.21,270 ரொக்கம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Also Read: சின்னவேடம்பட்டியில் பயங்கரம்; வாலிபரை தாக்கிய கும்பல் சிறையில் அடைப்பு
இதுகுறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, 7 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.





